ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வெள்ளிக்கிழமைதான் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போதுதான் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எங்களைவிட பலமான கட்சி தி.மு.க என்பதால், அவர்கள் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.

என் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பிப்ரவரி 18,19-ல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்யவிருக்கிறார். படிப்படியாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய ஈரோடு வரவிருக்கின்றனர். இளங்கோவனை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு நாங்கள் புதிதாக அறிமுகம் செய்யவேண்டிய அவசியமில்லை. அவர் எளிதாக வெற்றி பெறுவார்.
அ.தி.மு.க பழைய கட்சியாக இல்லை. அது தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்ட கட்சியாக உருமாற்றமடைந்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கூட நிறைவடையவில்லை. படிப்படியாக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. எங்களுக்கும், தி.மு.க-வுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதுதான்.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை வரவேற்றதில், எங்களுக்கு உடன்பாடில்லை. ஆனால், மதச்சார்பின்மை, மாநிலங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியா முழுவதும் சிறைகளிலுள்ள 75 சதவிகிதம் பேர் விசாரணைக் குற்றவாளிகள்தான். கொடூர குற்றங்களில் ஈடுபட்டோரை மட்டும் சிறையில் அடைத்துவிட்டு மற்றவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நானே நேரிடையாகப் பாதிக்கப்பட்டவன் என்பதால், இதைக் கூறுகிறேன்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், பங்கு வர்த்தகத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, மக்களவை கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதைப்போலவே அதானி விவகாரத்திலும் மக்களவை கூட்டுக்குழு அமைப்பதில் பிரதமர் மோடி ஏன் தயக்கம் காட்டுகிறார். மாட்டின் அனுமதி வாங்காததால் காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை `மாடு அணைப்பு நாளாக’ மத்திய கால்நடை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் அறிவித்துவிட்டது. இந்திய விலங்குகள் வாரியத்தின் இந்த நடவடிக்கையைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என்றார்.