கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார். அந்த வகையில், நேற்று போலீசார் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் படி, போலீசார் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு, கொண்டிருந்த போது வாகன ஓட்டிகள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
இந்த வாகன சோதனையில் பெண்களும், குடும்பத்தோடு வந்தவர்களும் தலைக்கவசம் அணியாமல் வந்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருசக்கர வாகனங்களுக்கான ஆவணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தனர்.
அதற்கு அந்த வாலிபர்கள் போலீசார் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறி அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். சாலையில், வாலிபர் ஒருவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க வைத்தது.
மேலும், அங்கிருந்த பொதுமக்கள் இந்த செயலை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்தநிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. போலீசாரை வாலிபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.