புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் 12 பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, எட்டுக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளும் உள்ளன.
காரைக்காலில் மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்.ஐ.டி., செயல்படுகிறது. மேலும், புதுச்சேரி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்லுாரிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர். பி.இ., பி.டெக்., டிப்ளமோ மட்டுமல்லாமல், எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளையும் முடித்து வெளியே வருகின்றனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங்கில் எம்.பில்., பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளிலும் இளைஞர்கள் சேர்ந்து படிக்கின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
புதுச்சேரியில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் கல்லுாரிகளில் இருந்து வெளியே வருகின்றனர். ஆனால், உள்ளூரில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக மிக குறைவாகவே உள்ளது. இதனால், மிக குறைந்த சம்பளத்தில் சாதாரண வேலைகளில் சேரும் அவலம் அரங்கேறி வருகிறது.
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்லுாரிகள் ஏராளமாக இருந்தும், புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா எனப்படும் ஐ.டி., பார்க் இதுவரை அமைக்கப்படவில்லை.
ஐ.டி., பார்க் அமைப்பதற்கான வசதி வாய்ப்புகள் புதுச்சேரியில் இருந்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக செயல்வடிவம் பெறாமல் உள்ளது.
அக்கறை காட்டாத அரசு
குறிப்பாக, நிலத்தடி நீரை பயன்படுத்தாத, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஐ.டி., கம்பெனிகளை பொருத்தவரை நிலத்தடி நீரை பயன்படுத்த போவதில்லை; சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் கிடையாது. இருந்தபோதும், ஐ.டி., பார்க் அமைப்பதில் அரசு அக்கறை காட்டாமல் உள்ளது.
மேலும், ஐ.டி., பார்க் அமைந்தால் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைப்பதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அந்த பகுதியே முன்னேற்றமடையும்.
ஊக்கம் தரப்படுமா?
புதுச்சேரிக்கு மிக அருகாமையில், கிழக்கு கடற்கரை சாலையில் 100 கிலோ மீட்டர் துாரத்தில் மாமல்லபுரம் அருகே மிக பெரிய ஐ.டி., கம்பெனிகளுடன் ஐ.டி., பார்க் இயங்கி வருகிறது.
ஆனால், புதுச்சேரிக்கு ஐ.டி., நிறுவனங்கள் வருவதற்கு அரசு ஊக்கம் தரவில்லை.இதன் காரணமாக, புதுச்சேரியை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி இளைஞர்களும், பெண்களும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
புதுச்சேரி இளைஞர்களின் திறமை நமது மாநில முன்னேற்றத்திற்கு பயன்படாமல் போய் விடுகிறது.இளைஞர்கள் நலன் கருதி, புதுச்சேரியில் ஐ.டி., பார்க் அமைப்பதற்கும், பெரிய ஐ.டி., நிறுவனங்களை அழைப்பதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்