பிபிசி ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களில் தொடர்ச்சியாக 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக மத்திய பா.ஜ.க அரசுக்கு ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

அந்த வரிசையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவும் தற்போது மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பிபிசி ஊடக அலுவலகம்மீதான சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா, “மேற்கத்திய அமைப்பின் ஒவ்வொரு மரியாதையையும், பிரதமர் மோடி பிரசாரமாக மாற்றுகிறார். ஆனால், மேற்கத்திய ஊடகங்களின் சிறு விமர்சனத்தைக்கூட பொறுத்துக்கொள்ள அவரால் முடியாது. கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ஊடகங்கள் தாக்கப்பட்டதைப்போல, தற்போது வெளிநாட்டு ஊடகங்களின் வாய் பூட்டப்படுகிறது.

அதேபோல், சுழற்சி முறையில் ஜி20 அமைப்பின் தலைவர் பதவியைப் பெற்றதிலிருந்து, இந்தியாவை `ஜனநாயகத்தின் தாய்’ என்று அழைப்பதிலிருந்து மோடி சோர்வடையவில்லை. இந்தியா, ஜனநாயகத்தின் தாய்தான். ஆனால், மோடி ஏன் பாசாங்குத்தனத்தின் தந்தையாகிறார். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்கள் தெருக்களில் போராடிக்கொண்டிருக்கையில், தங்களின் கருத்தியல் முன்னோர்களான ஆங்கிலேயர்களிடம் கருணை கோரினார்கள் இவர்கள்.

ஆனால் தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு பிரதமரும், பா.ஜ.க-வும், பிரிட்டிஷுக்கு எதிராக அலறுவது முரணாக இருக்கிறது. பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் இந்தியா 150-வது இடத்தில் இருக்கிறது. 2014 முதல் 37 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கத்தால், இந்திய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் கழுத்தை நெரிக்கப்படுகின்றன” என்று கூறினார்.