கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகர் கோவில் அருகே புலியூர்குறிச்சி-வில்லுக் குறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் கால் எலும்பு முறிந்து படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லோடு ஆட்டோ ஒன்று ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் லோடு ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். ஆனால், லோடு ஆட்டோ ஓட்டுநர் வழிவிடாமல் சென்றார்.
இதனை ஆம்புலன்சில் இருந்த ஊழியர் வீடியோவாக பதிவு செய்து போலீசாருக்குஅனுப்பி வைத்தனர். அதை பார்த்த போக்குவரத்து ஆய்வாளர் உடனடியாக லோடு ஆட்டோவின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவுசெய்து, லோடு ஆட்டோவிற்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.