சென்னை: “தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006, 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டணியை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரவும் வலுப்படுத்தவும் விரும்புகிறோம். இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்ற பெறும்” என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது: “எனக்கு வயது 81, முதல்வர் ஸ்டாலினுக்கு வயது 70. எனவே எனக்கு அவரை வாழ்த்துவதற்கான எல்லா உரிமையும் இருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடப்பவர் ஸ்டாலின். தமிழ்நாடு முற்போக்கான மாநிலம். இந்த மாநில நீண்ட நெடிய அரசியல் வரலாற்றைக் கொண்டது. மிகப் பெரிய அரசியல் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும், பகுத்தறிவாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கியுள்ளது. ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரது சேவையை தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒருபோதும் மறக்கமுடியாது.
மாநில அளவில் சமூக நீதியை எப்படி கட்டமைப்பது என்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு வெகு சீக்கிரத்தில் தொழில்மயமாதல் தொடங்கியது தமிழகத்தில்தான். திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சமூக நீதிக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டு சமுகத்தின் அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, அறிவியல் மனோபாவமும், பகுத்தறிவு சிந்தனையும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த சிந்தனை பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியிடம் இருந்தது. அதைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார்.
நாங்கள் கருத்தியல் ரீதியாக இணைந்திருக்கிறோம். பிரதமர் நேரு அறிவியல் மனோபாவம் உடையவர் என்பதை இங்கு பலர் மறந்துவிட்டனர். அவர் அச்சிந்தனையை வளர்த்தெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தியாவை சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவத்துடன் இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக டாக்டர் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்துள்ளார். திமுகவின் கொள்கையும் இதுதான்.
தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006, 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டணியை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரவும் வலுப்படுத்தவும் விரும்புகிறோம். இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்ற பெறும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மிக சிறப்பான இடம். ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து முதல்வர் ஸ்டாலின்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த யாத்திரை வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
இக்கட்டான நிலையில் இந்த நாடு சென்றுகொண்டிருக்கிறது. 23 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ் பாஜக ஆட்சியில் தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பாஜக தேர்தல் வெற்றிகளால் இந்த சமூகத்தை துண்டாட நினைக்கிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாஜகவின் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு ஒரு இன்ச் அளவுகூட இரையாகவில்லை. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு யார் பிரதமர் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 2024 தேர்தலுக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைமை தாங்கப் போகிறார், யார் தலைமைப் பொறுப்புக்கு வரப்போவதில்லை என்பதல்ல இங்கு கேள்வி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பாஜகவை எதிர்த்து போராட வேண்டும். அதுவே எங்கள் விருப்பம். மதச்சார்பின்மை, சமத்துவம், கருத்துரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது காங்கிரஸ் கட்சி. இதற்காக பலமுறை வீழ்த்தப்பட்டிருக்கிறது” என்று அவர் பேசினார்.
> “முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி முன்னெடுப்புகள்…” – சென்னை நிகழ்வில் அகிலேஷ் யாதவ் புகழாரம்