புதுடெல்லி: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
திரிபுராவில் தற்போது மாணிக்சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜககூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), ஆட்சி நடைபெறுகிறது. இந்த 3 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
போட்டியின்றி தேர்வு: இந்நிலையில், 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ம் தேதியும் 60 தொகுதி கள் கொண்ட நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்தமாதம் 27-ம் தேதி தலா 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேகாலயாவின் சோகியோங் தொகுதியில் போட்டி யிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் உயிரிழந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மூன்று மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இடைத்தேர்தல் முடிவுகள்: மேற்குவங்கத்தின் சாகர்திகி, அருணாச்சல பிரதேசத்தின், லும்லா, ஜார்கண்ட்டின் ராம்கர், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளில் கடந்த 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றின் முடிவுகளும் இன்று வெளியிடப்படுகின்றன.