காரைக்குடி அருகே பள்ளத்தூர் கீழ்சேவல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் இரண்டாவது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் கீழ்சேவல்பட்டி கிராமத்தில் கடை வீதியில் அமைந்துள்ள கடை எண் 7721 அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடந்த மாதம் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் அதே கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த அர்ஜுனன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களும் பல ஆயிரம் ரூபாய் பணமும் எரிந்து நாசமாகின. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக சுரேஷ் பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.