'அப்படியே ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க'.. அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து விழா மேடை ஏறி பேசினார்.

அப்போது உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன் என பேசி கொண்டிருந்த போதே கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த திமுக அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஒட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்… நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும் என ஆவசேமாக பேசினார்.

திமுக அமைச்சர் பொன்முடியின் இந்த சர்ச்சை பேச்சால் கொந்தளித்த கிராம மக்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தனது பேச்சை சுருக்கமாக முடித்து கொண்டு வேக, வேகமாக அமைச்சர் பொன்முடி புறப்பட்டு சென்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் நாங்கள் ஓட்டு போடாமல் தான் இவரு அமைச்சரானாரா என கேள்வி எழுப்பியபடி விழாவில் இருந்து கலைந்து சென்றனர்.

அமைச்சர் பொன்முடி ஏற்கனவே மகளிர் இலவச பேருந்து திட்டத்தை ”ஓசி” என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார். இதேபோல, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க திமுக அமைச்சர் பொன்முடியின் உத்தரவின்பேரில் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடியபோது அமைச்சர் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், மக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் ஆதிரமடைந்த பொன்முடி ஆபாசமான வார்த்தையால் திட்டியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.