புதுடில்லி: குடும்ப வன்முறையால் திருமணமான பெண்களைவிட, திருமணமான ஆண்களே அதிகம் தற்கொலை செய்கின்றனர்.
இது குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய ஆண்கள் கமிஷன் அமைக்கவும் கோரப்பட்டு உள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த மகேஷ் குமார் திவாரி என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, 2021ம் ஆண்டில், நாடு முழுதும், 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்துஉள்ளனர். இவர்களில் திருமணமான பெண்கள், 28 ஆயிரத்து 680 பேர். அதே நேரத்தில் திருமணமான ஆண்கள், 81 ஆயிரத்து 63 பேர்.
இதில், 33.2 சதவீத ஆண்கள் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துள்ளனர். அதுபோல, 4.8 சதவீத ஆண்கள், திருமணம் தொடர்பான பிரச்னையால் தற்கொலை செய்துஉள்ளனர்.
அந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக, 1.18 லட்சம் ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர். இது, மொத்த தற்கொலையில், 72 சதவீதமாகும்.
அதே நேரத்தில், 45 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். இது, 27 சதவீதமாகும். குடும்ப வன்முறையால் ஆண்கள் தற்கொலை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யும்படி தேசிய மனித உரிமை கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இந்த விவகாரத்தில் ஆண்களை பாதுகாக்கும் வகையில், உரிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.அதுவரை குடும்ப வன்முறை தொடர்பாக ஆண்கள் புகார் அளிக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.
குடும்ப வன்முறை மற்றும் திருமணம் தொடர்பான விவகாரங்களில் ஆண்கள் தற்கொலை செய்வது குறித்து ஆய்வு செய்யும்படி, சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். தேசிய ஆண்கள் கமிஷன் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement