தமிழ்நாட்டில்
கொரோனா வைரஸ்
பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி புதிதாக 64 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று 76 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 20, சென்னையில் 16, செங்கல்பட்டு 5 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம்
இதையடுத்து சேலம் 4, கடலூர் 2, தர்மபுரி 2, காஞ்சிபுரம் 2, மதுரை 2, சேலம் 4, திருப்பூர் 3, திருச்சி 3 என கொரோனா தொற்று பதிவாகி இருக்கிறது. இதுதவிர 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. நேற்று மட்டும் 3,020 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது 402 பேர் கொரோனா நோயாளிகளாக இருக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இதில் 363 பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு உரிய சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் அதிகரிப்பு என்பது மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டியது அவசியமாகிறது. இதற்கிடையில் இன்ஃபுளூயன்சா காய்ச்சலும் பரவி வருகிறது.
ஹெச்3என்2 வைரஸ்
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். H3N2 வைரஸ் காய்ச்சலை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.
மருந்துகள் இருப்பு
அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகதில் அதிகாரிகள் உடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 21) ஆலோசனை நடத்துகிறார்.
அமைச்சர் ஆலோசனை
இதில் தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? நிலைமை கட்டுக்குள் உள்ளதா? காய்ச்சல் வைரஸ் பரவலின் நிலை என்ன? போதிய அளவில் மருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகும் முக்கிய அறிவிப்பு
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அதில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் பார்க்கும் போது கொரோனா பாதிப்புகள் 500க்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.