புதுடில்லி, குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய, குஜராத் மாநில அரசுகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில், ௨௦௦௨ல் வன்முறை வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ௧௧ பேரை முன்னதாகவே விடுவித்து, குஜராத் அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது. இதன்படி, கடந்தாண்டு, ஆக., ௧௫ல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து, பில்கிஸ் பானு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி.நாகரத்தினா அடங்கிய அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
‘இது உணர்வுப்பூர்வமான விஷயம். இருப்பினும், சட்டத்துக்கு உட்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்படும்’ என, அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஏப்., ௧௮ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement