பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு @GovtofPakistan இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக இந்திய பொதுமக்கள் பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கைப் பார்க்கவும், கருத்துகளை பதிவு செய்யவும் தடை விதிக்கப்படுவது கடந்த ஆறு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.
இந்திய அரசு சட்டபூர்வமாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ட்விட்டர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நோட்டீஸில், தங்கள் நிறுவனத்தின் கோட்பாடுகளின்படி, தகுதியான சட்டபூர்வ கோரிக்கைகளை ஏற்று எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தியே பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கை இந்தியாவில் தடை செய்துள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ட்விட்டர் நிறுவனத் தரப்பிலோ இந்திய மற்றும் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பிலோ இந்த நடவடிக்கை பற்றி உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.