இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் சில மாநிலங்களில் வன்முறை, விபத்து சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, சசரம் மற்றும் பீகார் ஷெரிஃப் நகரங்களில் வகுப்புவாத வன்முறை வெடித்திருக்கிறது. இது தொடர்பாக 45 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இரு நகரங்களிலும் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையில் வாகனங்கள், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். சசரத்தில், மீண்டும் மோதல் வெடித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வன்முறையில் காயமடைந்தவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவலை தெரிவித்திருக்கிறார். மேலும், நிலைமையை ஆய்வுசெய்ய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் பேசியிருக்கிறார்.

வன்முறை சூழ்நிலையைக் கையாள்வதில் மாநில நிர்வாகத்துக்கு உதவக் கூடுதல் துணை ராணுவப் படைகளை பீகாருக்கு அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.