திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள பம்பரம்சுத்தி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. 74 வயதான இவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். தன்னுடைய பணி ஓய்வுக் காலத்திற்குப் பிறகு முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வாழை விவசாயத்தில் அசத்தி வரும் பெரியவர் பிச்சை, நடப்பு பசலியில் மொந்தன், பூவன் ரக வாழையை நட்டிருக்கிறார். சோதனை முயற்சியாக ‘உதயா கற்பூரவள்ளி’ என்கின்ற ரக வாழையையும் சிறிதளவு போட்டிருக்கிறார். அப்படி சோதனை முயற்சியாக நட்ட உதயா கற்பூரவள்ளி வாழையின் தார் ஒன்று 6 அடிக்கு மேல், ஆள் உயரத்திற்கு வளர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பேசியபோது அவர் கூறுகையில், “நான் அந்தக் காலத்துலயே எம்.ஏ எம்.எட் படிச்சிருக்கேன். 1973-ல் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்து, 41 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஆசிரியராக இருந்தக் காலக்கட்டத்தில், நான் நடத்திய 10-ம் வகுப்பு சமூக அறிவியல், 10-ம் வகுப்பு ஆங்கிலம், 12-ம் வகுப்பு வரலாறு பாடங்களைப் படித்த மாணவர்களில் ஒருவர் கூட, பொதுத் தேர்வில் ஃபெயில் ஆனதில்லை. அப்படி எந்த வேலையைச் செய்தாலும், அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என நினைப்பவன்.
விவசாயமும் எனக்கு அப்படித்தான். நான் பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆசிரியர் பணிக்குச் சேரும் முன்பே, முழு நேரமாக விவசாயத்தைத்தான் செய்து வந்தேன். 1973-ம் ஆண்டுக்கு முன்பே லால்குடி தாலுகாவில் கரும்பு உற்பத்தியில் அதிக மகசூல் எடுத்ததற்காக 2-வது பரிசினைப் பெற்றேன். எப்போதும் ஒரு ஏக்கருக்கு 50-60 டன் கரும்பை எடுத்து வந்த நிலையில், நான் ஏக்கருக்கு 79.5 டன் மகசூல் எடுத்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஆசிரியர் பணியிலிருந்து ரிட்டையர்டு ஆனதும் மீண்டும் முழுநேர விவசாயத்தில் இறங்கினேன். எனக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் ஏலரசி, மொந்தன், பூவன் ஆகிய வாழை ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். புதுவிதமாக ஏதாவது செய்யணும்னு ஒரு பரீட்சார்த்த முயற்சியாக ஐந்து உதயா கற்பூரவள்ளி வாழைக் கன்றுகளை வாங்கிவந்து நட்டேன். மக்கிய தொழுவுரத்தைப் போட்டு, முறையாக தண்ணீரைக் கொடுத்து வளர்த்ததில் 6 அடி உயரத்திற்கு வாழைத்தார் கிடைத்திருக்கிறது. எல்லோரும் என்னுடைய தோட்டத்திற்கு வந்து 6 அடி உயர வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு பாராட்டிச் செல்கின்றனர். அந்த உற்சாகத்தால் அடுத்த முறை உதயா கற்பூரவள்ளி வாழை ரகத்தை அதிகளவில் பயிரிடலாம் என்றிருக்கிறேன்” என்றார்.