தாக்கத்தை ஏற்படுத்தும் விதியால் பலனடையும் இந்திய வீரர்கள்..!

மும்பை,

தற்போதைய 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு இன்னிங்சின் பாதியில் ஒரு வீரரை வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியும். அந்த மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம்.

இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணியினர் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையும், பந்து வீசும் அணி கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ‘புதிய விதியால் இப்போது நாம் 11 வீரருக்கு பதிலாக 12 வீரர்களுடன் விளையாடுவது போல் உணருகிறோம்’ என்கிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி. ‘எப்படியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வந்து விடுவதால், வழக்கத்தை விட 10-15 ரன்கள் அதிகமாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது’ என்கிறார், பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ்.

இன்னொரு பக்கம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதியால் இந்திய வீரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. இந்த சீசனில் முதல் 24 ஆட்டங்களில் 10 அணிகளையும் சேர்த்து மொத்தம் 107 இந்திய வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இதுவே 2022-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் முதல் 24 ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்ட இந்திய வீரர்களின் எண்ணிக்கை 91. அதற்கு முந்தைய ஆண்டு 76.

பெரும்பாலான அணிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் விதியில் இந்தியர்களையே பயன்படுத்துவதால் இளம் வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’ அடித்துள்ளது. இந்த வகையில் களம் இறங்கும் கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா எதிரணியை மிரட்டுவதை பார்க்கிறோம். அது மட்டுமின்றி மூத்த வீரர்களையும், தொடர்ந்து விளையாடி களைப்படையும் வீரர்களையும் ஒரு இன்னிங்சில் பயன்படுத்தி விட்டு அடுத்த இன்னிங்சில் ஓய்வு அளிப்பதற்கும் இந்த விதி உதவுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.