ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து இருக்கலாம் என்று ஒரு தகவலும், பயங்கரவாதிகள் தாக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது அங்குள்ள மெந்தர் துணைப் பிரிவு பகுதியில் அமைந்து இருக்கும் பாடா துரியன் நீர்வீழ்ச்சிக்கு அருகே இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மின்னல் தாக்கியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன் கர்னல் தேவேந்திர ஆனந்த் உறுதிபடுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், “இந்திய ராணுவ வாகனம் இன்று 3 மணியளவில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடி நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட தீ விபத்து 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து இருக்கிறார்.” என்றார். இதுகுறித்து தகவலறிந்த 13 வது பிரிவு ராஷ்டிரிய ரைபில் படை தலைவர் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறி இருக்கும் நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் இந்திய வீரர்களும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அப்போது பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ராணுவத்தினர் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடி நோக்கி சென்றுகொண்டு இருந்தபோது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது.

உயிரிழந்த 5 வீரர்களும் ராஷ்டிரிய ரைபில் படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்த வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.