“இடிந்து விழுந்த புதிய தரைப்பாலம்; அந்தரத்தில் தொங்கிய மணல் லாரி” – தஞ்சை மாநகராட்சி அதிர்ச்சி!

தஞ்சாவூர், கீழவாசல் அருகேயுள்ள சிராஜூதீன் நகர் மெயின் சாலையில், ஆதாம் என்கிற வடிகால் வாய்க்கால் கடந்து செல்கிறது. வாய்க்காலில் இருந்த பழைய தரைப்பாலம் பழுதடைந்து காணப்பட்ட நிலையில், புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், ரூ.6.25 கோடி செலவில் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் ரூ.2.4 லட்சம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

இடிந்து விழுந்த புதிய பாலம்

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இந்த நிலையில், மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பாலத்தின் மேல் சென்றபோது, பாலம் இடிந்து விழுந்தது. இதில் லாரியின் பின்பகுதி ஆதாம் வாய்க்காலுக்குள் சிக்கிக்கொண்டது. முன்பகுதி அந்தரத்தில் தொங்கியது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரியில் இருந்த மணலை அப்புறப்படுத்திய பிறகு லாரியை கிரேன் மூலம் மீட்டனர். பாலம் தரமாக கட்டவில்லை என அந்தப் பகுதியினர் கூறிவந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இடிந்த புதிய தரைப்பாலம்

இது குறித்து அந்தப் பகுதியினரிடம் பேசினோம். “பாலப்பணிகள் நடைபெற்றபோதே பணிகளில் தரமில்லை. இதனை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பாலத்தின் மதிப்பு, பணியைச் செய்கின்ற ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கவில்லை.

அவசரகதியில் பாலத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணி நடைபெற்றபோது அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் தரமில்லாமல் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. எப்படியும் இந்த பாலம் இடிந்து விழும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு சீக்கிரமே இடியும் என நினைக்கவில்லை. இதே போல் கால்வாயின் சுற்றுச்சுவர் கட்டும்போதும் இடிந்து விழுந்தது. அதையும் மீண்டும் கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலம் உடைந்ததால் சிக்கிய லாரி

பத்திரப்பதிவு அலுவலகம், நான்கு பள்ளிகள், ரேஷன் கடை உள்ளிட்டவை அந்தப் பகுதியில் இருப்பதால் தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் அந்தப் பாலத்தைக் கடந்து செல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாமல் முக்கியமான பாலத்தை தரமற்ற முறையில் அலட்சியத்துடன் கட்டியதால் இடிந்து விழுந்திருக்கிறது” என்றனர்.

மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும், கவுன்சிலருமான மணிகண்டன் இது குறித்துப் பேசுகையில், “ஆதாம் வடிகால் வாய்க்காலில் 15 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட பாலத்தை தனியார் ஒப்பந்த நிறுவனம் கட்டியது. பணிகள் நடைபெற்ற போதே தரமில்லை என பொதுமக்களே கூறியும்… அதிகாரிகள் காதில் வாங்காததால் தற்போது பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இதற்கு காரணமான ஒப்பந்தக்காரர்மீதும், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உடைந்த தரைப்பாலம்

இடிந்து விழுந்த பாலத்தை மாநகராட்சி மேயர் இராமநாதன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் ஆய்வுசெய்தனர். பின்னர் மேயர் இராமநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாலப்பணிகள் நிறைவடையாததால் பாலத்தை இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் போக்குவரத்துக்கு அனுமதிக்கவில்லை. வாகனங்கள் செல்லாமல் இருக்க பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டிருந்தது. அந்தத் தடுப்புகளை அகற்றிவிட்டு மணல் லாரி தடையை மீறி சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விபத்துக்குக் காரணமான டிரைவர், லாரி உரிமையாளர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும், `விபத்துக்கு நாங்கள்தான் காரணம். இடிந்த பாலத்தை நாங்களே கட்டித்தருகிறோம்’ என லாரி உரிமையாளர் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதன்படி புதிய பாலம் கட்டித்தரப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.