ஐரோப்பாவில் வெப்ப அலையால் கடந்தாண்டில் 15,700 பேர் பலி| Heatwave in Europe kills 15,700 last year

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன் : ஐரோப்பாவில், 2022ல், வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று, உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய மூன்று வாயுக்களின் அளவுகள், 2022ல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன. வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் ஆகியவை, இந்தியா உட்பட பல நாடுகளை கடுமையாக பாதித்ததுடன், பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உலக சராசரி வெப்பநிலை, கடந்த ஆண்டில் பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 1.15 டிகிரி செல்ஷியஸ் அதிகம். கடந்த ஆண்டில், கிழக்கு ஆப்ரிக்காவில் தொடர்ச்சியான வறட்சி, பாகிஸ்தானில் வரலாறு காணாத மழைப்பொழிவு, சீனா மற்றும் ஐரோப்பாவில் பதிவான வெப்ப அலைகள், கோடிக் கணக்கான மக்களைப் பாதித்தன. இதனால், பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டது.

latest tamil news

இந்தியாவிலும், அதன் அண்டை நாடான பாகிஸ்தானிலும், பருவமழைக்கு முந்தைய காலம் அதிக வெப்பமாக இருந்தது. இது, உத்தரகண்டில் காட்டுத் தீக்கு வழிவகுத்தது. இந்தியாவில் பருவமழைக் காலத்தில், குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 900 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில், கோடை காலத்தில், ஸ்பெயினில் 4,600 ; ஜெர்மனியில் 4,500; பிரிட்டனில் 2,800; பிரான்சில் 2,800; போர்ச்சுக்கலில் 1,000 உட்பட மொத்தம் 15 ஆயிரத்து, 700 பேர், வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.