ஆரம்பிக்கலாங்களா.. பிடிஆர் ஆடியோ விவகாரம்.. ஆளுநரை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை.. பரபரக்கும் அரசியல் களம்!

சென்னை:
அமைச்சர் பழனிவேல் ராஜனின் ஆடியோ ஒன்று தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலை ஏற்படுத்திய நிலையில், அது போலியானது என அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழு சந்திக்கவுள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழக பாஜகவின் உயர்நிலைக்குழு ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்கவுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ரூ.30000 கோடியை முறைகேடான வழிகளில் பெற்றதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார்.

இந்த ஆடியோவை சுதந்திரமான தடயவியல் சோதனைக்கு உட்படுத்துமாறு ஆளுநரிடம் நாங்கள் கோரிக்கை விடுக்க உள்ளோம். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டதாக அமைச்சர் பழனிவேல் ராஜன் கூறியுள்ளார். மேலும், யார் வேண்டுமானலும் யார் குரலில் வேண்டுமானாலும் ஆடியோ தயாரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அவருக்கு நாங்கள் ஒரு சவால் விடுக்கிறோம்.

அந்த ஆடியோவில் பதிவான அதே பேச்சை நான் பேசியது போல ஒரு ஆடியோவை பழனிவேல் தியாகராஜன் தயாரிக்கட்டும். பின்னர், நான் எனது சொந்தக் குரலில் பேசி ஒரு ஆடியோவை கொடுக்கிறேன். இந்த இரண்டு ஆடியோக்களையும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெறும் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்போம். அவர்கள், இவை இரண்டில் எது உண்மையானது எனக் கண்டுபிடிக்கட்டும். அப்பொழுதான், இது எவ்வளவு பெரிய விவகாரம் என்பதும், போகிற போக்கில் எதையாவது சொல்லி இந்த விஷயத்தை மறைத்துவிட முடியாது என்பதும் அவருக்கு புரியும்.

நீங்கள் சொல்லும் கதைகளை, உங்கள் கட்சியினரை போல தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நிதியமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை, சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில், “ஒரே ஆண்டில் உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலின் மருமகன் சபரீசனும் அவர்களின் மூதாதையரை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். இப்போது அதுவே அவர்களுக்கு பிரச்சினையாகி வருகிறது. அவ்வளவு பணத்தை எப்படி கையாள்வது.. எப்படி சிக்காமல் தப்பிப்பது என அவர்களுக்கு தெரியவில்லை. தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களிடம் இருக்கும்” என அந்த ஆடியோவில் ஒருவர் மற்றொருவரிடம் பேசுகிறார்.

இது பழனிவேல் தியாகராஜனின் குரல் தான் என்றும், அவரும் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரும் பேசிய ஆடியோ க்ளிப் தான் இது என்றும் சவுக்கு சங்கர் சார்பில் கூறப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதனிடையே,, நேற்று, இந்த ஆடியோ தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார்.அதில், இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்ட ஒன்று என்றும், தார்மீக கொள்கைகள் ஏதும் இல்லாத நேர்மையற்ற அரசியல்வாதிகளால் இந்த ஆடியோ திரும்ப திரும்ப பரப்பி பெரிதுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.