தேனி : ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் முப்பெரும் விழா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி குனிந்து கும்பிட்டது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, போலீசார் அந்த பேனரை அகற்றினர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமான நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என மாறி மாறி முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் கடந்த 20ஆம் தேதி அங்கீகரித்தது.
இதையடுத்து, அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதுஒருபுறமிருக்க, மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் நாளை முப்பெரும் விழா மாநாட்டை நடத்துகிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணி மாநாடு : ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் மேற்பார்வை செய்து வருகின்றனர். ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும் என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. ஈபிஎஸ் தரப்பினர் இந்த பேனர் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பேனரை ஓபிஎஸ் தரப்பினரை வைத்தே போலீசார் அகற்றியுள்ளனர்.
சர்ச்சை பேனர் : திருச்சியில் நடைபெறும் மாநாடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்திருந்தனர். அதில் ஒரு பேனரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை குனிந்து வணங்குவது போல் இருந்த புகைப்படத்தை அச்சிட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஜெயலலிதா இருந்தபோது மேடை ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் ஜெயலலிதா, ஓபிஎஸ் இருவரும் அமர்ந்திருக்கும்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோர் குனிந்து வணங்குவது போல இருக்கும். அந்த புகைப்படத்தை பேனரில் வைத்திருந்ததால், ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியை இழிவு செய்வதாக ஈபிஎஸ் தரப்பினர் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பதற்றம் : ஓபிஎஸ் தரப்பு வைத்த பேனருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் காவல்துறையினர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்தே அகற்றி பேனர்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் அதிமுகவினரிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.