சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமியிடம் ஒப்படைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரம் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடரஎதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் 2011-15-ம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில், போக்குவரத்துத் துறையில் பல்வேறு பணிக்காக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, அமலாக்கத் துறை கடந்த 13-ம்தேதி செந்தில் பாலாஜி, அவரதுசகோதரர் அசோக் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தியது. தொடர்ந்து, 14-ம் தேதி அதிகாலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஓமந்தூரார் மருத்துவமனை வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அவரை பார்த்துவிட்டு சென்றார். அதன்பின், செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தக் குழாய்களில் அடைப்புஇருப்பதால், அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம்இரவு செந்தில் பாலாஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சில தினங்களில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை, அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து இதுகுறித்து ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பரிந்துரையை ஆளுநர் நேற்று முன்தினம் இரவு திருப்பி அனுப்பியதுடன், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்து விளக்கம் கோரினார்.
அதன்பின், விளக்கங்களுடன் மீண்டும் பரிந்துரைக் கடிதம் ஆளுநருக்கு நேற்று முன்தினம் இரவேஅனுப்பி வைக்கப்பட்டது. ஒருவேளை ஆளுநர் முதல்வரின் பரிந்துரையை ஏற்காவிட்டால், துறைகளின் அன்றாட பணிகளைக் கருத்தில் கொண்டு நிர்வாக ஆணை பிறப்பிப்பதற்கான அடிப்படை பணிகளை, சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று அரசு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் நேற்று மாலை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.
அதேபோல், செந்தில்பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை, மொலாசஸ் துறையானது வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்படுகிறது.
அதேநேரம், செந்தில் பாலாஜி குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதாலும், தற்போது அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், தார்மீக அடிப்படையில் அமைச்சரவையில் அவர் தொடர்ந்து நீடிப்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
செந்தில் பாலாஜி நீடிப்பார்: அரசாணை வெளியீடு
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்கள், வேறு இரு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கவில்லை. ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அறிவித்து தமிழக அரசு நேற்றிரவு அரசாணை பிறப்பித்துள்ளது.