ஊசலாட்டத்தில் "பிஎஸ்சி கணிதம்" படிப்பு.. தமிழ்நாட்டுக்கே பேராபத்து.. ஏன் அவ்வளவு முக்கியம்?

சென்னை:
தமிழ்நாட்டில் பிஎஸ்சி கணிதத்தில் (BSC Maths) சேரும் மாணவர்களின் எண்ணிக்கை திடீரென அபரிமிதமாக குறைந்து வருவதால் அந்தப் படிப்பையே கைவிடும் நிலைக்கு பல கல்லூரிகள் வந்திருக்கின்றன. இப்போதே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் என கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிஎஸ்சி கணிதத்திற்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? ஒரே ஒரு படிப்புதானே.. இது இல்லையென்றால் அப்படி என்ன தலைப்போகும் ஆபத்து நேர்ந்துவிடும்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Arts and Science) மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் ஆர்வம்:
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த முறை பொறியியல் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதிலும், பிசிஏ (BCA), பிபிஏ (BBA), பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி காட்சித் தகவலியல் (BSC visual communication), பி.காம் (B.COM) உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்து வருகின்றனர்.

ஊசலாட்டத்தில் பிஎஸ்சி கணிதம்:
இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத விதமாக, நடப்பாண்டு தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி கணிதம் (BSC Maths) படிப்பில் மிக மிகக் குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகள், பிஎஸ்சி கணிதம் படிப்பை அடியோடு தூக்கிவிட்டன. தற்போது வரை, மாநிலத்தில் உள்ள 51 அரசுக் கல்லூரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில்தான் பிஎஸ்சி கணிதம் படிப்பில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவற்றில் 4 கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட பிஎஸ்சி கணிதத்தில் சேரவில்லை என்பதுதான் மிக வேதனையான விஷயம்.

படிப்பையே தூக்க முடிவு:
அரசுக் கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் இந்த நிலைமைதான் காணப்படுகிறது. டாப் கல்லூரிகளான டிஜி வைஷ்ணவா, எம்எம்சி ஆகிய கல்லூரிகள் கூட பிஎஸ்சி கணிதத்துக்கு மாணவர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல கலை அறிவியல் கல்லூரிகள் பிஎஸ்சி கணிதம் குரூப்பையே தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய குரூப்புகளில் கிளைப் படிப்புகளை தொடங்கலாமா என யோசித்து வருகின்றன.

தமிழ்நாட்டுக்கே ஆபத்து:
இந்நிலையில், இந்த நிலைமை தமிழகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது, பிஎஸ்சி கணிதத்தை யாரும் படிக்க முன்வரவில்லை என்றால், நாளை பள்ளி – கல்லூரிகளில் கணித ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். இப்போது மருத்துவம்,, பொறியியல், ஐஐடி போன்ற மேற்படிப்புகளுக்கும், பல அரசு வேலைகள், வங்கிப் பணிகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாகி விட்டது.

கல்வியாளர்கள் எச்சரிக்கை:
இவற்றில் கணிதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்கும் போது, கணக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போனால் எதிர்கால தலைமுறையினருக்கு வேலை கிடைப்பதே சிரமமாகிவிடும் என்பதோடு, வருங்காலத்தில் தமிழகத்தில் அறிவியலார்களும், விஞ்ஞானிகளும் உருவாவதும் குறையும் என கல்வியாளர்களும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.