வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வணக்கம்,
நான் குமரி மாவட்டதில் இருந்து ஹாக்ஸன், எனது 107 வயது நிரம்பிய தாத்தாவின் வாழ்கை, அவர் வாழ்ந்துவரும் குமரி மாவட்டத்தின் கருங்கல் பகுதி, அதன் சிறு வரலாறு மற்றும் குடும்பமும் அதன் தொடர்ச்சியும் பற்றிய ஒரு தொகுப்பையும் எழுதியுள்ளேன்
பல வண்ண விளக்குகளாலும், புது புது கட்டடங்களாலும், நவீன வாழ்கை முறை மட்டும் மக்களின் பன்னாட்டு கலாச்சார வெளிகொணர்தலினாலும் தினம் தினம் இளமையாக மாறிக்கொண்டிருக்கிறது குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதி. ஆனால் இங்கு பிறந்த வளர்ந்த என் தாத்தாவின் முதுமை சொல்கிறது நாம் நமது வயதான நகரங்களை எவ்வாறு மெருகேற்றி இளமை தோற்றம் கொடுக்கிறோம் என்று.
கருங்கல், கொடுக்கல் – வாங்கலுக்காக மக்கள் கூடும் ஒரு சிறு சந்தை நகரம், இப்பகுதியில் எப்போதிலிருந்து மக்கள் வாழ்ந்தார்கள், என்பதற்காக ஆதாரமே, கருங்கல்.
கருங்கல் பொதுச்சொல், வேறெங்கும் இல்லாமல் இங்கு மட்டும் ஏன் ஊர் பெயராகியது என்பதற்கான சரியான பதில் என்னிடம் இல்லை ஆனால் என் தாத்தாவின் காலத்தில் கருங்கல் பல மாறுதல்களை பெற்றது. இராஜையா கருங்கலை விட பழமையானவர் அல்ல, ஆனால் குமரியில் பிறந்த கே.வி. மஹாதேவன், தமிழக முதல்வர் எம். ஜி. அர்., இந்திய பிரதமர் இந்திரா காந்தி, அமெரிக்க ஜனாதிபதி ஜே. ஃப். கே., போன்ற தொலைதூரத்தில் கடந்து போன காலங்களில் வாழ்ந்த இவர்களை விட முதியவர்.

இந்தியா பண மதிப்பு நமக்கு நினைவில் இருக்கும் அது போல திருவிதாங்கூர் மக்கள் அப்போதைய நாணயமான பணம் மற்றும் சக்கரத்தை, இந்திய ரூபாயாக மற்ற சில ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது, அவை வரலாற்றில் பெரிதாக பதிக்கப்படாமல் போனது, இதுபோன்று மக்களின் கூட்டு நினைவுகளில் இருந்தும் தொலைந்து போன பல தூரத்து நிகழ்வுகளை பார்க்க வழிவகுக்கும் சலரமாகவும் தாத்தா எங்களுக்கு வாழ்கிறார்.
குடும்பம் என்ற அமைப்புமுறையில் நான் முக்கியமாக கருதும் காரியங்களில் ஒன்று, குழந்தைகள் மூலம் குடும்ப வரலாற்றை சிறு கதைகளால் தலைமுறைகள் தாண்டி கடப்பதாகும். இந்தக் கதைகள் வேடிக்கையானதாகவோ, சோகமாகவோ, ஊக்கமளிப்பதாகவோ இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் குடும்ப வரலாற்றையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் புரிந்துகொள்வதில் முக்கிய காரணமாவதோடு இவ்வுலகில் நமக்கான அடயாளம், நாம் நம்மையும், நமக்கு தெரிந்த சிறிய குடும்ப வட்டத்தயும் விட பெரிய , நீண்ட, நெடிய பரம்பரயின் ஒரு பகுதி என்பதை நினைவு படுத்துகிறது. குடும்ப கதைகளை பகிர்வதில் பல நன்மைகளும் உள்ளன, இது குடும்ப உறவுகளை வலுப்படுத்த உதவுவதுடன் குடும்ப உறுப்பினர்களிடையே நெருக்கம் மற்றும் தொடர்பற்று போனவர்களுடன் தொடர்பையும் உருவாக்குகிறது.

நம் முன்னோர்களின் கதைகளை நாம் தலைமுறைகள் தாண்டி கடக்கும் போது, அவர்களின் நினைவுகளை மட்டும் நாம் பாதுகாக்கவில்லை, நமது கடந்த காலத்துடனான தொடர்பையும், நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்ற உணர்வையும் நமக்கு பின் வரும் சந்ததிகளுக்கு உணர்துவதுடன், அவர்களின் பலம் மற்றும் பலவனீ ங்கள், அவர்களின் ஒழுக்க மதிப்புகள் மற்றும் நேர்மைகள், அவர்களின் பாரம்பரியங்கள் மற்றும் வாழ்க்கை முறையையும் நாம் பாதுகாத்து வருகிறோம்.
கருங்கல் போன்று எங்கள் குடும்ப வரலாற்றுக்கும் ஒரு தெளிவான துவக்க புள்ளி இல்லை, பொதுவாக அது ஒரு மங்கிய செவிவழி செய்தியாகவே தலைமுறைகள் கடந்து நம்மை வந்தடைகின்றது, அப்படி கேட்டறிந்த சுமார் 90 ஆண்டு பழமை வாய்ந்த செவிவழி செய்திதான் என் கொள்ளு தாத்தா யாக்கோபு மற்றும் மார்த்தாண்டம் கல் கோயிலை நிறுவிய ஸ்காட்லாந்தை சேர்ந்த மிஷனரி சிங்கிலேயருடனான சபை அலுவல் சார்ந்த நட்பு.
கருங்கல் பகுதியிலுள்ள பாலூரில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய மிஷனரிகளால் நிறுவப்பட்டு தொழுது வரப்பட்ட தேவாலயத்தில் யாக்கோபு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்து முறை சபை நடப்புகளை பதிப்புகளாக பராமரிக்கபட முயற்சி எடுத்தது இன்றும் வரலாறாக அச்சபையில் உள்ளது.
யாக்கோபு நூறு ஆண்டுகுக்கு முன் பள்ளி ஆசிரியராக பணியாற்ற தகுதி பெற்றவர் அன்றைய சூழலுக்கு தொழில் செய்ய தீர்மானித்து தொழிலும் செய்து வந்தார், இவருடைய தகப்பனார் அருளானந்தம், அவரும் கிறிஸ்தவரே. கிறிஸ்தவம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல நூறு ஆண்டுகளாக வழிபட்டு வரும் மதம். எங்கள் குடும்பம் எப்போது எதற்காக வேதத்தை ஏறோம் என்ற கேள்விக்கு தாத்தா இராஜையாவாலும் விளக்கம் கொடுக்க முடியவில்லை எனவே தற்போதய எங்கள் குடும்ப நினைவுகளிலும் இல்லை.

என்றோ ஏற்று பறக்க எடுத்த சிறகுகள் மத்திய கிழக்கில் புடரபட்டது சித்தாந்தம் என்றாலும் நாங்கள் உள்ளூர் குருவிகளே. எங்கள் தினசரி வாழ்க்கை கருங்கல் பகுதிக்குள்ளும் தொழில் வாழ்க்கை மேற்கே களியக்காவிளை வரைக்குமாக இருந்தது. நாங்க அனைவரும் பிறந்து வளர்ந்தது கருங்கலில் ஆனால் தாத்தா இராஜையா பிறந்த 1915, கருங்கல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியகவும், சுதந்திர இந்தியாவில் 1947 ல் பிறந்த் என் தகப்பனார் சில்பர்ட்டின் கருங்கல் இந்திய யூனியனில் அப்போது இணைந்து, புதிதாக அழைக்கப்பட்ட திருவிதாங்கூர்-கொச்சின் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அதே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த போது என் கருங்கல் இந்திய ஜனநாயகத்தின் தமிழ் நாட்டில் ஒரு பகுதியாக இருக்கின்றது, இந்த சிறிய ஊருக்குள், ஒரு குறுகிய காலத்தில் இவ்வளவு மாற்றம். மாற்றம் எங்களுக்கு வெறும் பெயர் மாற்றத்துடன் போகவில்லை, வாழ்கையை மாற்றியது, பணத்தையும் பண மதிப்பையும் மாற்றியது, எங்கள் தமிழை மாற்றியது, அதுவரை மேற்கே திருவநந்தபுரதின் சுழற்சியில் சுற்றிய எங்கள் வாழ்க்கை கிழக்கே திருநெல்வேலி, மதுரை, மெட்ராஸ் என நீண்டது. மாற்றம் முழுமையாக எங்களுக்கு வெற்றி என்பதல்ல என் கருத்து, வித்தியாசமான அனுபவங்கள் எங்கள் வழக்கை தரத்தை மேலும் சிறப்பாக்கியதாகவே கருதுகிறேன்.
இவ்வளவு கால மற்றும் கலாசார சுழற்சிகள் மத்தியிலும் அவர்கள் வாழ்த்த காலத்தில் அது ஒரு சாதாரண வாழ்க்கை. கூகுள் மேப்ஸ் மூலமாகவும் கண்டுபிடிக்க முடியாத வழிகள், பண்ணைகள், வயல்கள், வேலிகள், பாறைகள், வாய்க்கால்கள் கடந்து பயணிப்பது அவர்கள் மனநிலைபடி சாதாரண தினசரி வழக்கை. இப்போதும் இராஜையா தாத்தாக்கு ஆறு மைல் துரத்தில் இருக்கும் தொடுவட்டி என்ற இன்றைய மார்த்தாண்டம் நடந்து செல்லும் தூரம் தான், அதேபோல் பல ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வரும் வழியோ கால்களும் அவரை பெரிதாக ஆச்சரியபடுத்தவில்லை, ஒருவேளை ரொம்ப நாள் வாழ்ந்தவர்கள் தங்களை சுற்றி பல மாற்றங்களை பார்த்து , ஏன் சக்கரம் வட்டமாக உள்ளது என்பது போன்ற கேள்விகள் கேட்காமல் , சக்கரம் வட்டம்தான் என்பதை ஒத்து கொண்டு, மூளையை குழப்பாமல், உலக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வேறு வேலையை பார்க்க சென்று விடுவார்களோ என்னமோ, ஒருவேளை இதுகூட அவரது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம்.

அவரது நீண்ட ஆயுளைவிட அவரது கதை நீண்டது, அவர் வெற்றிடதிலிருந்து வந்தவரல்ல, பலர் அவர் முன் வந்தார்கள், நீண்ட மற்றும் முழுமையான வாழ்வை பெற்றனர், ஆனால் ஒரு சிலரே எங்கள் நினைவுகளில் எஞ்சியுள்ளனர். சேர்ந்து வாழ்ந்தவர்கள், விரும்பி உடன் இருந்தவர்கள், கண் திறக்காமலே மறைந்த பிள்ளைகள், நினைவுகளால் பகிரப்பட்டவர்கள், எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியவர்கள் என பலரும் கேள்விகளுக்கு விடையாக இல்லாமல் விதையாக புதைக்கபட்டுள்ளனர் எங்கள் குடும்ப கல்லறை தோட்டத்தில். தங்கள் தங்கள் காலங்களில் இந்த நிலத்தின்மேல், அதே வானத்தின் கீழ் வாழ்ந்தார்கள், அவர்களின் கதைகள், அவர்களின் மகிழ்ச்சிகள், கனவுகள், அவர்கள் மரணித்த நினைவுகள் என அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாக இல்லாமல் இருந்தாலும் கருங்கல் பகுதியின் ஒரு சிறு கூட்ட மக்களின் நெருக்கமான தனிப்பட்ட நினைவுகளாகவே இருக்கும்.
நம்மில் பலரின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் நம் சொந்த ஊரோடு இணைந்து இருக்காது, அவ்வாரல்ல இராஜையா தாத்தாவின் வாழ்க்கை, கருங்கலுக்கும் களியக்காவிளைக்கும் இடையே ஆன ஒரு சிறு வட்டத்தில் தான் அவர் முழு வாழ்க்கை. என் தாத்தாவின் இளமை காலத்தில் வியாபாரிகள் அதிகாலையில் எங்கள் வீட்டை கடந்து மாட்டுவண்டியில் செல்வர், அந்த வழியில் இன்றும் பயணிக்கலாம், அதே குளங்கள், வளைவுகள், எற்ற இறக்கங்களுடன் கூடிய சாலை. சாலைகளில் இப்போது இயந்திர வாகனங்கள் வேகமாகவும், கூட்டமாகவும் சென்றாலும், தொடர்ந்து பயணித்தால் தொடுவட்டி மணிக்கூண்டு இருந்த இடம் வரும், ஸ்மார்ட் வாட்ச், செல் போன் காலத்தில் அதற்கான அவசியம் தற்போது இல்லை, மணிக்கூண்டும் இப்போது அங்கே இல்லை. அன்று நடந்தார்கள், இன்று பயணிக்கிறோம், ஒருநாள் வேறுவிதமாக எங்கள் வீட்டை கடந்து போவார்கள், மணிக்கூண்டு நோக்கிய பயணம் இனிமேல் இருக்காது என்றாலும், கருங்கலில் இருந்தது மார்த்தாண்டம் நோக்கிய பயணம் என்றும் இருக்கும்.

காலத்திற்கு ஏற்ப மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள், அதற்கேற்ப கருங்கலும் மக்களின் விருப்பத்திற்கேற்ப புது பொலிவுடன் மாறிக்கொண்டே இருக்கும். நம் வசம் வரும் நம்மைவிட பழமையான எதுவும் நமக்கு சொந்தமானதல்ல, அதன் வாழ்வில் நாம் கடந்து செல்கின்றோம், நாம் வெறும் பராமரிப்பாளர்களே.

நாங்களும் தனி நபர்களாக, குடும்பமாக, சிறு கூட்ட மக்களாக கருங்கலின் வாழ்வில் பயணிக்கிறோம், நாங்கள் இந்நிலத்தை விட்டு பிரிந்தாலும் கருங்கல் தன் கதையை சொல்லிகொண்டே இருக்கும். ஜூலை 2, 2023 இல் தாத்தா இராஜையா, 108 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார், சென்ற ஆண்டு அவரது 107 ஆவது வயதில் என் மகன் இத்தாலி நாட்டிலுள்ள மிலான் நகரில் பிறந்தான், பல்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் பிறந்து வளர்ந்து வரும் அவரது கொள்ளு பிள்ளைகளில் இவன் இருபதாவது, ஒரு நாள் இவர்களில் ஒருவராவது தன் வேர்களின் ஆழத்தை தெரிந்துகொள்ள விரும்புவார்கள், எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்போதும் கருங்கல் இன்னும் சிறப்பாகவும், இளமையாகவும் இருக்கும், மக்களின் வாழ்க்கை தரமும் மாற்றம்பெற்றிருக்கும், ஆனால் இன்னொரு 107 வயது மனிதரை கருங்கல் காணுமா என்பது சந்தேகமே.
–Hockson
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.