மதுரை: தமிழகத்தில் பொதுப் பாதை, சாலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த மாசாணம், உயர் நீதிமன்ற கிளையில் 2017-ல் தாக்கல் செய்த மனு: சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக உரிய அனுமதி பெற்ற ஆவின் பூத் வைத்துள்ளேன். இங்கு ஆவின் பால் மற்றும் ஆவின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். சாலை விரிவாக்கப் பணியின்போது என் ஆவின் பூத் அகற்றப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் ஆவின் பூத் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். நெடுஞ்சாலைத்துறை வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்திருந்தார். இதனால் கடை அகற்றப்பட்டது என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருந்ததால், அதே இடத்தில் வேறு ஒருவர் கடை வைக்க அனுமதி வழங்கியது எப்படி? என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்க யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது. இதனால் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாக செயலாளர் ஆகியோர் இணைந்து குழு அமைத்து மாநிலம் முழுவதும் ஆவின் கடைகளின் எண்ணிக்கையை கண்டறிந்து சட்டங்கள் மற்றும் விதிகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சாலை ஓரங்களில் கடை அமைக்க உரிமம் வழங்கும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். பொதுப் பாதைகள், சாலைகள், தெருக்கள், பாதைகள், நடைபாதைகள் எந்த நோக்கத்துக்காகவும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டார்.