`எதிர்நீச்சல்’ தொடர் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாரிமுத்து. `எம்மா ஏய்…’ என்கிற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர். அவரை ஒரு மாலை நேரத்தில் நம் அலுவலகத்தில் சந்தித்தோம். கவிஞர் வைரமுத்து தொடங்கி அவருடைய இயக்குநர் பயணம் வரையில் பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவை அனைத்தும் டெலி விகடன் யூடியூப் தளத்தில் உள்ளது. எதிர்நீச்சல் உட்பட, பல விஷயங்கள் தொடர்பாக அவரிடம் பேசினோம். அவரிடம் பேசியதிலிருந்து…
“என்னோட கற்பனைத் திறனை என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியல. ஒரு இயக்குநர் என்கிற வாலைச் சுருட்டி வைக்க ரொம்ப கஷ்டப்படுறேன். நான் நிறையவே அடி வாங்கிட்டேன். வறுமை என்னை துவைச்சு எடுத்துருச்சு. திரும்பவும் நாம அந்த டிராக்கிற்குள்ள போக வேண்டாம்னு முடிவு பண்ணினேன். அதனாலதான் நடிகராகப் பயணிக்கலாம்னு நினைச்சேன். மிச்சம் இருக்கிற வாழ்க்கையை ஒரு நடிகனா வாழ்ந்துட்டு செத்துப் போயிடலாம்னு இருக்கேன். இப்ப இந்தியன் 2-விலும், ஜெயிலரிலும் நடிக்கிறேன். ஜெயிலர்ல பெரிய கேரக்டராவே பண்றேன்.
‘ஜெயிலர்’ படத்துல நடிச்சதுல பெரிய பலன் என்னன்னா அது ரஜினிசார்கிட்ட பழக்கம் கிடைச்சதுதான். என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு அவருக்கு. என் கூட மணிக்கணக்கா பர்சனல் விஷயங்கள், அவர் சினிமாவுக்கு வந்ததுன்னு பல விஷயங்கள் பேசியிருக்கார். சூப்பர் ஸ்டாருடனெல்லாம் மணிக்கணக்கா பேசுற வாய்ப்பு யாருக்கும் அமையாது. சூப்பர் ஸ்டார் அவருடைய பர்சனல் மொபைல் நம்பரையே என்கிட்ட கொடுத்திருக்கார். அந்த அளவுக்கு நாங்க நெருக்கமாகிட்டோம்!” என்றவர் குடும்பம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“எந்த விழாவுக்குப் போனாலும் குடும்பத்தோட தான் போவோம். என் கூட சேர்ந்து என் மனைவி ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க. நிறைய தியாகம் பண்ணியிருக்காங்க. இப்ப அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். என் பையன் ஐடியில் வேலை பார்க்கிறான். பொண்ணு எம்.பி.ஏ படிச்சிட்டு இருக்கா. என் மனைவிதான் ரொம்ப நாளா சீரியலில் நடிக்கச் சொல்லிட்டே இருந்தாங்க. திருச்செல்வம் சார் ஒரு சவுண்ட் இன்ஜினியர்னு தெரியும். அவர் பெரிய ரைட்டர். ரொம்ப நல்லா எழுதுவார். ஆல்ரெடி ‘கோலங்கள்’ செம ஹிட். அவர் கூப்பிட்டாருன்னுதான் போனேன். மதுரையில் நடக்கிற கதை, நீங்க நடிப்பீங்களான்னு கேட்டார். ஆதி குணசேகரன்னா யாருன்னு ஒரு மூணு மணி நேரம் சொன்னார். இந்தக் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், வாய்க்கும் பயங்கரமா எழுதுவாருன்னு தெரியும். அப்படித்தான் அழகா எடுத்துட்டு இருக்கார். சன் டிவி ரீச் எனக்குத் தெரியும். நடிப்புதானே இறங்கலாம்னு முடிவு பண்ணி இறங்கினேன். ஆனா, இவ்ளோ ரீச் ஆகும்னு அன்னைக்கு நினைச்சுக் கூட பார்க்கல!” என்றவரிடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்துக் கேட்டோம்.
“சின்னத்திரையோட ரீச் ரொம்ப பெரிய அளவு இருக்கு. வில்லனை பெண்கள் ரசிக்கிறது ரொம்பவே ஆச்சரியம். இந்த சீரியலில் பெண்களுக்கு என்னை பிடிக்குது. அதுவே பெரிய விஷயமா நினைக்கிறேன். நானும், என் மனைவியும் சேர்ந்து எல்லா எபிசோடும் பார்த்துடுவோம். அதுல ஏதாவது தவறு இருந்தா அதை மாத்திப்பேன். “எதிலுமே ஈஸியா திருப்தி அடைய மாட்டேன். இதை இப்படிப் பண்ணியிருக்கலாம், அதை அப்படிப் பண்ணியிருக்கலாம்னு சொல்லிட்டே இருப்பேன். இந்த ஆதி குணசேகரன் கேரக்டர் மாதிரி உண்மையிலேயே இருக்காங்க. சுரண்டையில் அப்படி ஒருத்தர் இன்னமும் இருக்கார்!” என்றதும் “இது மாதிரி வேற சீரியல் வாய்ப்பு வந்தா நடிப்பீங்களா?” எனக் கேட்டோம்.
“கண்டிப்பா பண்ணுவேன். ஆனா, இந்த சீரியல் முடியுற வரைக்கும் வேற சீரியல் பண்ண முடியாது. டப்பிங் பேச நைட்டு ஒரு மணிக்குப் போவேன். அதுக்கு நிறைய டைம் எடுத்துப்பேன். வேற யாராலும் எனக்கு டப்பிங் கொடுக்க முடியாது. சில விஷயங்களை டப்பிங்லதான் புதுசா சேர்ப்பேன். அதனால ரொம்பவே டைம் எடுப்பேன். இந்த சீரியல் 1500 எபிசோட் வரைக்கும் போகும்னு சொல்லியிருக்காங்க. நிச்சயம் ரொம்ப வருஷம் போகும். இப்ப விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’னு ஒரு சீரியல் வரப் போகுது. அது ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாதிரியான கதை. விசு கதாபாத்திரம் மாதிரின்னு சொல்லி நான் ஜெயிலர் ஷூட்டிங்ல இருக்கும்போது நேரடியா ராதிகா மேடமே எனக்கு போன் பண்ணி கேட்டிருந்தாங்க. அந்த சீரியல் பண்ண முடியாதுங்கிற சூழல் வந்துடுச்சு. அதுவும் பெரிய கேரக்டர்தான். அதுக்குப்பிறகுதான் அந்தக் கேரக்டரை இப்ப எஸ்.ஏ.சந்திரசேகர் சார் பண்றார்!” என்றார்.
கோலங்கள் ஆதி, வடிவேலு காமெடி எனப் பல விஷயங்கள் குறித்து நடிகர் மாரிமுத்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!