அடுத்தடுத்து விவாகரத்து கேட்கும் மருமகள்கள்? மறைந்த மயில்சாமி வீட்டில் தொடரும் சோகம்! காரணம் என்ன?

மயில்சாமி. சமீபத்தில் அவர் மறைந்தபோது திரையுலகமே சோகத்தில் உறைந்தது. பலரும் அவரது உதவும் குணம் குறித்து கண்ணீருடன் பேசினர். மயில்சாமியை நகைச்சுவை நடிகராகத்தான் இன்றைய தலைமுறை அறியும். லைட்மேன், ‘லஷ்மன் ஸ்ருதி’ டீமோடு மிமிக்ரி, சண்டைக் காட்சிகளுக்கு டப்பிங் என நடிகராவதற்கு முன்பான இவரது சினிமாப் பயணம் பலரும் அறியாத தகவல்கள். ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் முன்பொருமுறை இதுகுறித்து விரிவாகவே மனிதர் பேசியிருந்தார்.

”ஆமா சார்… மிமிக்ரில ஒரு வெரைட்டியா ஜாக்கி சான் குங்பூ ஃபைட்டை பண்ணினேன். ‘அபுஹாய்’னு ஒரு சத்தம் தமிழ் சினிமா சண்டைக் காட்சிகள்ல கேட்டிருப்பீங்க. அது என்னுடையதுதான். நூற்றுக்கணக்கான படங்களுக்கு அபுஹாய் சவுண்ட் கொடுத்திருக்கேன். கமல் சார் அதைக் கண்டுபிடிச்சு நேர்ல கூப்பிட்டுப் பாராட்டினார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துல வாய்ப்பும் கொடுத்தார். நடிக்க வாய்ப்பு இல்லாத நாள்கள்ல என்னை அந்த டப்பிங்தான் காப்பாத்துச்சு. கமல் சார் தொடர்ந்து ‘வெற்றி விழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’னு அவர் படங்கள்ல ஃப்ரெண்டா வாய்ப்பு கொடுத்தார். அது மூலமா என் முகம் மக்கள் மத்தியில பதிவும் ஆச்சு. ரஜினி ‘பணக்காரன்’ ஷூட்டிங்ல பாராட்டினார்” என அந்தப் பேட்டியில் பேசியிருப்பார்.

மயில்சாமி

பிளாட்பாரங்களில் தூங்கியபடி வாய்ப்புத் தேடி தன் திறமையாலும் கடின உழைப்பாலும் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்தார். இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் மயில்சாமியின் திடீர் மரணம் குறித்து உருக்கமான இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில், தற்போது, மயில்சாமி இறந்து நான்கு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தில் நிகழ்ந்திருக்கும் சில சம்பவங்கள் மயில்சாமியின் ரசிகர்கள் மற்றும் அவரது திரைத்துறை நண்பர்கள் பலரையும் வருத்தத்தில் தள்ளியிருக்கிறது.

இதுகுறித்து மயில்சாமி குடும்பத்தினருக்கு நெருக்கமான சிலரிடம் பேசிய போது, ‘அவருக்கு அருமை நாயகம் என்கிற அன்பு, யுவன் என இரண்டு மகன்கள். அருமைநாயகம் சில படங்களில் நடித்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவு அந்தப் படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் இப்பவும் மனம் தளராம முயற்சி பண்ணிட்டுதான் இருக்கிறார். ரெண்டாவது மகன் யுவனுமே சினிமா முயற்சியிலதான் இருக்கார்.

இவங்க ரெண்டு பேருக்குமே மயில்சாமி இருக்கிறப்பவே திருமணம் முடிஞ்சிடுச்சு. அவர் இருக்கிறவரை வீட்டுப் பிரச்னை வெளியில் தெரியாமப் பார்த்துக்கிட்டார். வீட்டுப் பிரச்னைன்னா வழக்கமான மாமியார் மருமகள் பிரச்னைதான். ரெண்டு மருமகள்களுக்குமே மாமியாருடன் பிரச்னை இருந்துட்டு வந்தது. ஆனால் ரெண்டு தரப்புக்கும் பாலமா இருந்து பிரச்னை பெரிசாகாமப் பார்த்துகிட்டார் மயில்சாமி.

மயில்சாமி

ஆனா, அவர் மறைஞ்ச பின்னாடி சின்னச் சின்னப் பிரச்னை கூட பெரிசா வளர்ந்து தீர்க்க முடியாததா ஆகிடுச்சு.

அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரும் அம்மா பக்கம் பேசறதா மனைவிகள் பக்கம் பேசறதானு புரியாம பிரச்னையை வளர விட்டுட்டாங்க. விளைவு, இப்ப மயில்சாமியின் மருமகள்கள் ரெண்டு பேருமே விவாகரத்து கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்க. சீக்கிரமே இந்த விவகாரம் பொதுவெளிக்கு வரலாம்” என்கின்றனர்.

மயில்சாமியின் மூத்த மகன் அருமைநாயகத்தின் மனைவி ஐஸ்வர்யா திமுகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள். ஐஸ்வர்யா – அருமைநாயகம் திருமணம் கடந்த 2019ம் ஆண்டுதான் நடந்தது. திருமணத்தில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.

‘தீவிர சிவபக்தரான மயில்சாமி தான் இருந்த காலத்தில் பலருக்கும் பல உதவிகளைச் செய்தவர். அவரது குடும்பத்தில், அதுவும் அவர் இறந்த கொஞ்ச நாட்களிலேயே இப்படியா நடக்க வேண்டும்’ என ஆதங்கப்பட்டு வருகின்றனர் மயில்சாமியின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.