40 இல்ல வெறும் ரூ.3 லட்சம் தான்… பழசை உருட்டும் KSRTC… புது பஸ் இல்லையாம் போங்க!

கர்நாடகாவில் மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல ஆண்டுகளாக ஓடி தேய்ந்து மோசமான நிலைக்கு ஆளான பேருந்துகள் ஏராளம் இருக்கின்றன. தற்போது புதிதாக பதவியேற்று கொண்ட
காங்கிரஸ்
அரசு, உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிலைமை வேறாக இருக்கிறது. பழைய பேருந்துகளை புதுப்பிக்கும் வேலையில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளார்களாம்.

கர்நாடகா அரசு பேருந்துகள்

இதுதொடர்பான வேலைகளை KSRTC மேலாண் இயக்குநர் வி.அன்புகுமார் முடுக்கி விட்டுள்ளார். கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அதன்பிறகு இயல்பு நிலை திரும்பினாலும் இழப்பை ஈடு செய்ய முடியவில்லை. தற்போது பெண்களுக்கு இலவசம் என்று காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தி உள்ளது.

நிதி நெருக்கடி

இதனால் இழப்பு அதிகரிக்கும் என்று தான் சொல்லப்படுகிறது. புதிதாக ஒரு பேருந்து வாங்க வேண்டுமெனில் 40 லட்ச ரூபாய் வரை செலவாகும். அதுவே பழைய பேருந்தை சீரமைக்க 3 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகிறதாம். தற்போது KSRTC-ல் உள்ள 8,100 பேருந்துகள் இறுதி காலத்தை எட்டிவிட்டன. ஏனெனில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஓடாய் தேய்ந்துவிட்டது.

என்னென்ன மாற்றங்கள்?

அதில் முதல்கட்டமாக 1,000 பேருந்துகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்கல் துறை தலைவர், பேருந்தில் இருந்து பழுதடைந்த பாகங்களை நீக்கி விடுவோம். அதன்பிறகு உள்கட்டமைப்பை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுப்போம். பேனலிங், மெட்டல் ஷீட், ஜன்னல் கதவுகள், விண்ட் ஷீல்டு, சீட் குஷன், புதிய பெயிண்ட் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

பணிகள் மும்முரம்

எஞ்சினையும் முழுமையாக பரிசோதித்து சரிபார்க்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் நடவடிக்கை எடுப்போம். இதற்கான பணியில் மொத்தம் 15 டிப்போக்கள், 2 மண்டல ஒர்க் ஷாப்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாதத்திற்கு 50 பேருந்துகள் வீதம் வேலைகள் முடிக்கப்படும். இந்த பணிகள் கடந்த ஆண்டின் பாதியில் இருந்தே தொடங்கி தற்போது வரை 494 பேருந்துகள் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன.

15 ஆண்டுகள் பழையது

எனவே எஞ்சிய 500 பேருந்துகளுக்கான பணிகள் விறுவிறுப்படைய இருப்பதாக தெரிவித்தார். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. மத்திய அரசின் விதிமுறைகளின் படி, அரசு வாகனங்கள் 15 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அந்த வகையில் 12 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை தேர்வு செய்து தான் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றியே ஆக வேண்டும் என்பதை அரசு நினைவில் வைத்து செயல்பட்டால் நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.