எனக்குக் காதல் திருமணம். கணவரும் நானும் பணிபுரிகிறோம். 10 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். நானும் கணவரும் கல்லூரில் சீனியர், ஜூனியர். எனவே, என் தோழிகள் அனைவரையும் அவர் அறிவார். அதில் ஒரு தோழிதான், இப்போது எங்களுக்குள் பிரச்னையாக இருக்கிறாள்.

நானும் என் கணவரும் கல்லூரிக் காலத்தில் காதலித்தபோது, அந்தத் தோழியும் என் கணவரை ஒருதலையாகக் காதலித்தாள். ஆனால் எங்கள் காதல் பற்றி அவளுக்குத் தெரிய வந்ததால் ஒதுங்கிக்கொண்டாள். எனக்குத் தோழியாகவே தொடர்ந்தாள். அவள் காதலை பற்றி நான் என் கணவரிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டேன். இந்நிலையில், என் கணவர் ஆபீஸில் இருந்து தோழி ஆபீஸுக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு கான்ட்ராக்ட் செல்ல, அலுவல் காரணமாக இருவரும் பேச ஆரம்பித்தனர். அந்தப் பேச்சு வளர்ந்துகொண்டே இருக்கிறது.
கணவரும் தோழியும் அலுவல் தாண்டி ஃப்ரெண்ட்லியாக இப்போது பேசுகின்றனர். ’உன் ஃப்ரெண்டை இன்னைக்கு பார்த்தேன்’, ‘உன் கணவர் இன்னைக்கு எங்க ஆபீஸ் வந்திருந்தார்…’ என்று இருவருமே அவர்களது அலுவல் சந்திப்புகளை எல்லாம் என்னிடம் பகிர்ந்தார்கள் என்றாலும், என் மனதில் ஒரு நிம்மதியின்மை உருவானது.

இருவரின் பேச்சும், நட்பும் விரிந்து, ஒருவேளை கல்லூரிக் காலத்தில் தோழி என் கணவரை ஒருதலையாகக் காதலித்ததை அவரிடம் சொல்லிவிடுவாளோ, அதற்குப் பின் இருவரின் பழக்கமும் எவ்வாறு பயணிக்குமோ என்றெல்லாம் குழப்பங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டே இருந்தன. இந்நிலையில், முன்பை போல இருவருமே தங்கள் சந்திப்புகள் பற்றி என்னிடம் பகிர்வது குறைந்தது. நான் கேட்டபோது, ‘பார்த்தாதானே சொல்ல முடியும்? நான் அவங்க ஆபீஸுக்கு போகலையே’ என்றார் கணவர். என் தோழியிடம், ‘என் கணவர் ஆபீஸ் கான்ட்ராக்ட் முடிஞ்சிடுச்சா?’ என்று யதார்த்தமாக விசாரிப்பதுபோல கேட்டபோது, ‘தெரியலையே…’ என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டாள்.
இப்போதெல்லாம், என் கணவரும் தோழியும் அவர்கள் பழகுவதை என்னிடம் மறைப்பதுபோல எனக்குத் தோணுகிறது. என் தோழி, அவள் கணவருடன் பிரச்னையால் பிரிந்து வாழ்கிறாள். குழந்தை இல்லை. எனவே, அந்தச் சூழலும் எனக்குப் பாதுகாப்பின்மை அளிக்கிறது.

ஒருவேளை என் சந்தேகத்தை நான் என் கணவரிடம் வெளிப்படையாகக் கேட்டுவிட்டால் அவர் உஷார் ஆகிடுவார் என்பதால், விட்டுப் பார்ப்போம் என்று இருக்கிறேன். ஆனால், இந்தத் தாமதமே தவறாகி அதற்குள் அவர்கள் இன்னும் நெருக்கமாகிவிட வழிவகுத்துவிடுமோ, இதை இப்போதே கத்தரித்துவிட வேண்டுமோ என்றும் தோணுகிறது.
என்ன செய்வது நான்?