மோடி குறித்த அவதூறு வழக்கு – குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு

புதுடெல்லி: மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி? ’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக் கூறி, குஜராத் பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை: இதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மக்களவை எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு செய்யப்பட்டார்.

இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, தனக்கு ஜாமீன் வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். ஆனால், தண்டனைக்கு தடை விதிக்க சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இதன் விசாரணை கடந்த மே மாதம் நடைபெற்றது.

ஆனால், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடை விடுமுறைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.

நீதிமன்றம் தலையிட முடியாது: இந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தெரிவிக்கையில், ‘‘ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சரியானதுதான். இதற்கு ராகுல் காந்தி தடை கோர எந்தக் காரணமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், இதுபோன்ற அவதூறுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்றார்.

இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் பிரசன்னா, மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.