இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் தலையை வெட்டி மூங்கில் வேலியில் வைத்த வீடியோ வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. தற்போது இரண்டரை மாதங்களை கடந்தும் வன்முறை என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
மைத்தேயி பிரிவு மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் இணைக்க கூறுகின்றனர். இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் தான் வன்முறை வெடித்தது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியானது.
அதாவது மணிப்பூரில் வன்முறை தொடங்கிய பிறகு மறுநாள் அதாவது மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் அடங்கிய கும்பல் ஒரே குடும்பத்தை சேர்ந்த குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 5 பேரை சித்ரவதை செய்து தாக்கியுள்ளது. இதில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் 3 பெண்கள் ர்வாணப்படுத்தப்பட்டனர். இதில் 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லும் வீடியோ தான் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலித்துள்ளது. நேற்றும், இன்றும் மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் சபைகளின் தலைவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்றும், இன்றும் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தவறை செய்தவர்கள் தப்பிக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரின் தலையை வெட்டிய பொதுவெளியில் வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மணிப்பூரில் உள்ள பிஷ்னுபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
அதாவது குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த டேவிட் தீக் என்பவர் தலை வெட்டப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது மூங்கிலால் வேலியின் மீது வைக்கப்படுகிறது. கடந்த 2ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஜூலை 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு கும்பல் 3 பேரை கொன்றது. பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் எல்லையில் தொடர்ந்து மோதல்கள் நடந்து வந்த நிலையில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதோடு, பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தான் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த டேவிட் தீக். இவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அதன்பிறகு அவரது தலை ரத்தம் சொட்ட சொட்ட மூங்கில் வேலியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவும் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.