சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் இந்த ஆண்டிலாவது தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

சேலம்: கொங்கு மாவட்டங்களை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங் களுடன் இணைக்கும் சேலம் – விருத்தாசலம் வழித்தடத்தில் இந்த ஆண்டிலாவது, தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்க, சேலம் ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சேலம், கள்ளக் குறிச்சி மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே கோட்டங்களில் சேலம் ரயில்வே கோட்டம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் பாதைகள் பெரும்பாலானவை, முக்கிய ரயில்வே வழித்தடமாக இருக்கின்றன. அதில், தமிழகத்தில் ரயில் போக்குவரத்து அதிகம் கொண்ட விருத்தாசலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துடன்,

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை இணைக்கக் கூடிய, சேலம்- விருத்தாசலம் வழித்தடம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு, ரயில் வசதியை வழங்கக் கூடிய ஒரே வழித்தடமாகும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களை இணைக்கக் கூடிய வழித்தடமாக இது இருக்கிறது.

சேலம்- விருத்தாசலம் இடையிலான 136 கிமீ தூரம் கொண்ட அகல ரயில் பாதையை மின் மயமாக்கும் பணி 2020-ம் ஆண்டு தொடங்கியது. ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட மின்மயமாக்கல் பணி 2021-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டது. எனினும், இந்த வழித்தடத்துக்கு, ரயில்வே நிர்வாகம் போதிய முக்கியத்துவம் தராமல், ஒரு சில ரயில்களை மட்டுமே இயக்கி வருகிறது என்பது ரயில் பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.

இது குறித்து சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூறியது: சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் கொங்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஒரு ரயில் கூட, இதுவரை விடப்படவில்லை. மேலும், சேலத்தில் இருந்து, விருத்தாசலம் வழித்தடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை.

இதனால், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள், சென்னைக்கு சென்று வர, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சேலத்தில் இருந்து, புதுச்சேரிக்கு பயணிகள் ரயில் தேவைப்படும் நிலையில், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் புதிய ரயில்களை இயக்குவது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் ஆர்வம் காட்டுவதில்லை. இவை ஒருபுறம் இருக்க, தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள், கோடை விடுமுறை நாட்கள், சபரிமலை சீசன் என முக்கிய காலங்களில், சேலம்- விருத்தாசலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதே கிடையாது.

சேலத்தில், ரயில்வே கோட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், சேலம்- விருத்தாசலம் வழித்தடம் புறக்கணிக்கப்பட்ட நிலையி லேயே உள்ளது. இதன் காரணமாக, கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களை பயன்படுத்திக் கொள்வதும் தடைபடு கிறது. மேலும், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட மக்கள், நீண்ட தூர பயணங்களின்போது, பல்வேறு இன்னல்களுடன் பேருந்துகளில், பயணித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் பணிபுரிபவர்கள், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில், பேருந்துக்காக விடியவிடிய காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. இந்த அவல நிலை, பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில், மக்களை மேலும் கடுமையாக அலைக்கழிக்க வைக்கிறது. தெற்கு ரயில்வேயில் புறக்கணிக்கப்பட்ட வழித்தடமாகவே இது இருக்கிறது.

எனவே, இந்த ஆண்டிலாவது, சேலம்- விருத் தாசலம் வழித்தடத்தில், தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். அதில், சேலம்- சென்னை, சேலம்- புதுச்சேரி, கடலூர்- கோவை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மேலும், இந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.