அமித் ஷா சொன்ன விஷயம்… எதிர்க்கட்சிகளுக்கு என்ன ஆச்சு… மணிப்பூர் விஷயத்தை பேசலாமா?

மணிப்பூர் விவகாரம் நெஞ்சில் ஈரமுள்ள யாரையும் பதறவைக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் டபுள் எஞ்சின் சர்க்கார் பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் வாரங்களை கடந்து மாதங்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கடந்த மே மாதம் நடந்ததாக சொல்லப்படும் அதிர்ச்சிகர சம்பவத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி தேசத்தையே தலைகுனிய வைத்துவிட்டது.

மணிப்பூர் பயங்கரம்

நாகரிக சமூகத்தில் இப்படி ஒரு நிகழ்வை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மணிப்பூரில் இணைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் அங்கு நடப்பவை உடனுக்குடன் வெளியே வருவதில்லை. கால தாமதமாகவே தெரிய வருகின்றன. இத்தகைய சூழலில் வெளி உலகிற்கு தெரியாத இன்னும் எத்தனை, எத்தனை நிகழ்வுகள் இருக்கின்றனவோ? எனக் கேட்க தோன்றுகிறது.

மழைக்கால கூட்டத்தொடர்

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் மணிப்பூர் விவகாரம் பிரதான விஷயமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் காரசாரமாக கோபக் கனலை வெளிப்படுத்தி வருகின்றன. அடுத்தடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் தான் வீணாகி வருகிறது.

அமித் ஷா பேச்சு

இதற்கிடையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உரிய விவாதம் நடத்தாமல் ஆளும் தரப்பு மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு வேறு மாதிரியாக அமைந்துள்ளது. இன்று (ஜூலை 24) பிற்பகல் 2.30 மணிக்கு மக்களவை கூடியதும் பேசத் தொடங்கிய அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு

அதேசமயம் எதிர்க்கட்சிகள் அமைதி காத்து விவாதிக்க ஒத்துழைக்க வேண்டும். மிகவும் உணர்ச்சிகரமான இந்த விஷயத்தில் உண்மை என்னவென்று நமது நாடு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அப்படியெனில் உரிய விவாதம் நடக்க எதிர்க்கட்சிகள் தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

ஆம் ஆத்மி எம்.பி சஸ்பெண்ட்

ஆனால் எதிர்க்கட்சிகள் எம்.பி பலரும் அப்படி இல்லை என்கின்றனர். மாநிலங்களவையில் அவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் சென்று கோஷமிட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விஷயத்தை பற்றி பேச பிரதமர் ஏன் மறுக்கிறார்?

எது உண்மை

இந்த விஷயத்தில் உரிய விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இல்லை. எனவே எனது போராட்டம் தொடரும் எனக் கூறியுள்ளார். இதே பதிலை தான் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரிடம் இருந்து கேட்க முடிகிறது. ஆனால் அமித் ஷா சொல்வது வேறு மாதிரியாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.