சென்னை: சினிமா பிரபலங்கள் வீடுகளில் பணியாற்றி வரும் பலருக்கும் நல்ல சம்பளம் கிடைத்து வரும் சூழலில் சிலர் செய்யும் திருட்டுத்தனத்தால் பல வேலைக்காரர்கள் மீதும் சந்தேக கண் சமீப காலமாக அதிகமாகவே எழுந்துள்ளது.
சென்னையில் வசித்து வரும் நடிகை ஷோபனா வீட்டில் அவரது தாயாரை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்ட பணிப்பெண் கடந்த சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி ஜிபே மூலமாக தனது மகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், பணிப்பெண் பணத்தை திருடியது தெரிந்தும் நடிகை ஷோபனா அவர் மீது காட்டிய கனிவு தான் தற்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஷோபனா வீட்டிலும் கைவரிசை: தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஷோபனாவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் வீடு உள்ளது. மேலே, ஷோபனாவின் தாயார் ஆனந்தம் வசித்து வருகிறார். கீழே ஷோபனாவின் நாட்டிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், மலையாள படங்களில் அதிகமாக நடித்து வரும் நடிகை ஷோபனா அடிக்கடி கேரளாவுக்கு சென்று விடுவார். அதுபோன்ற சமயங்களில் தனது தாயாரை கவனித்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டுமே என நினைத்து விஜயா என்பவரை வேலைக்கு சேர்ந்துள்ளார்.
போலீஸுக்கு போன் போட்ட ஷோபனா: கடந்த சில மாதங்களாகவே தனது அம்மாவின் பணம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவதை கவனித்த நடிகை ஷோபனா இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு போன் மூலம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வீட்டுக்கு வந்து சோதனை செய்த போலீஸார் பணிப்பெண் விஜயாவிடம் விசாரணை நடத்தியதும் போலீஸை பார்த்த அதிர்ச்சியில் தான் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
ஜிபே மூலம் மகள் வங்கி கணக்குக்கு சென்ற பணம்: டிரைவர் முருகன் என்பவர் மூலமாக ஜீபேவில் தனது மகள் வங்கி கணக்கு பணத்தை அனுப்பி வந்ததை போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டுள்ளார் விஜயா.
இத்தனை நாட்கள் நம்பிக்கையோடு அம்மாவை கவனித்துக்கொள்ள வைத்த பணிப்பெண் கொஞ்சம் கொஞ்சமாக 41 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை திருடிய விவரம் ஷோபனாவிற்கு தெரிவிக்கப்பட்டது.
ஆக்ஷன் எடுக்க வேண்டாம்: கையும் களவுமாக விஜயா மாட்டிய நிலையிலும், அவர் மீது எந்தவொரு ஆக்ஷனும் எடுக்க வேண்டாம் என நடிகை ஷோபனா போலீஸாரிடம் தெரிவித்து விட்டாராம்.
மேலும், தொடர்ந்து தனது வீட்டிலேயே வேலை செய்யட்டும் என்றும் அவர் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாராம் நடிகை ஷோபனா.
முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஈஸ்வரி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது பகீரை கிளப்பிய நிலையில், தொடர்ந்து பல சினிமா பிரபலங்களிடம் வேலை செய்யும் நபர்கள் இதுபோன்ற சின்ன திருட்டு முதல் பெரிய திருட்டு வரை செய்யும் சம்பவங்கள் அம்பலமாகி வருகின்றன.
ஒரு சிலர் பணத்தாசையால் செய்யும் செயலால், ஒழுக்கமாகவும் நேர்மையுடனும் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கும் கெட்டப் பெயர் உண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.