ஐடி ஊழியர்களான கௌதமும் (ஹரீஷ் கல்யாண்) மீராவும் (இவானா) இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அடுத்த கட்டமாக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நோக்கி நகர்கிறது காதல். தன் கணவருடன் தனி வீட்டில் திருமண வாழ்க்கையை நடத்த ஆசைப்படுகிறார் மீரா. ஆனால், சிங்கிள் பேரன்ட்டான தன் அம்மா லீலாவை (நதியா) விட்டு வர மறுக்கிறார் கௌதம். அதனால் ‘நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். அங்கு உன் அம்மாவுடன் பழகிப்பார்த்து செட்டானால்தான் கல்யாணம்’ என கன்டிஷன் போடுகிறார் மீரா. இந்த கன்டிஷனை மறைத்து தன் அம்மாவை மீராவின் குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார் கௌதம். அங்கு என்னென்ன கலவரங்கள் எல்லாம் அரங்கேறின, மீரா – கௌதம் இணைந்ததா என்பதைத் திக்கித் திணறி, நம்மை டயர்டாக்கிச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி.

ஒரு ஐடி இளைஞனுக்கான ஸ்டைலிஷ் லுக்கிற்குப் பக்காவாக செட் ஆகிறார் ஹரீஷ் கல்யாண். காதலியிடம் காதலைச் சொல்லத் தடுமாறும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஆனால், மற்ற காட்சிகளில் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பை வழங்காமல், குழப்பத்துடனேயே திரிகிறார். தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள், கோபப்படும் இடங்கள் போன்றவற்றில் மட்டும் இவானாவின் தேர்வு க்ளிக் ஆகியிருக்கிறது. ஆனால், இவானா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே பெரும் குழப்பத்துடன் இருப்பதால், படம் முழுவதுமே வந்தாலும் ஒரு சம்பிரதாய கதாநாயகியாக இறுதியில் மாறிவிடுகிறார். மற்றொரு பிரதான கதாபாத்திரமான லீலாவிற்கு நதியாவின் தேர்வு கச்சிதம்தான் என்றாலும், அழுத்தமான காட்சிகள் எதுவுமே அவருக்கு எழுதப்படவில்லை என்பது ஏமாற்றமே!
யோகி பாபு தன் வழமையான உருவக் கேலி நகைச்சுவைகளைக் கையில் எடுத்து, நம் காதுகளைப் பதம் பார்க்கிறார். சில கவுன்ட்டர் காமெடி ஒன்லைன்களால் மிர்ச்சி விஜய் சிரிக்க வைக்கிறார். இவர்கள் தவிர, வினோதினி, தீபா, மோகன் வைத்யா, ஜானகி சபேஷ், வெங்கட் பிரபு, ஶ்ரீநாத், சாண்டி மாஸ்டர் என ஒரு டஜன் துணை கதாபாத்திரங்களால் திரையை நிறைத்திருக்கிறார்கள்.
ஒரு ‘ரோம்-காம்’ ஜானருக்குத் தேவையான வண்ணமயமான காட்சிகளாலும் ப்ரெஷ்ஷான ஷாட்டுகளாலும் விளையாடாமல், சில இடங்களில் விளம்பரப் படமாகவும் சில இடங்களில் யூடியூப் வீடியோவாகவும் படத்தை மாற்றியிருக்கிறது விஸ்வஜித் ஒடுக்கத்திலின் ஒளிப்பதிவு. முதற்பாதிக்குக் கைகொடுத்திருக்கும் பிரதீப் இ.ராகவ்வின் படத்தொகுப்பு, இரண்டாம் பாதியை நிர்க்கதியாக விட்டுச் சென்றுள்ளது.

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியின் இசையில் படம் முழுவதுமே நிறையப் பாடல்கள் வந்துபோகின்றன. ஆனால், எந்தப் பாடலுமே முணுமுணுக்க வைக்கவோ, ரசிக்க வைக்கவோ இல்லை. இரண்டாம் பாதியில் வரிசைக்கட்டி வரும் பாடல்கள் நம் பொறுமையைச் சோதிக்க மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. பின்னணியிசையும் கைகொடுக்காததால், தொழில்நுட்ப ரீதியாகப் படத்திற்கு எந்தப் பலமும் கிடைக்கவில்லை.
படத்தின் டிரெய்லரிலேயே மொத்தக் கதையும் சொல்லப்பட்டுவிட்டதால், ரசிக்கும்படியான சுவாரஸ்யமான காட்சிகளின் தொகுப்பாகப் படம் இருந்திருக்க வேண்டும். மாறாக, படம் தொடங்கி சில நிமிடங்களிலேயே அலுப்புத் தட்டத் தொடங்கிவிடுகிறது. ஹரீஷ் கல்யாண், இவனா, மிர்ச்சி விஜய் என இளம் அணியையும், நதியா, ஜானகி சபேஷ், வினோதினி, மோகன் வைத்யா என சீனியர்கள் அணியையும் வைத்துக்கொண்டு கலகலப்பான, அதேநேரம் அழுத்தமான காட்சிகளைக் கொண்டு படத்தை நகர்த்தாமல், சுவாரஸ்யமற்ற காட்சி தொகுப்புகளால் மொத்த படத்தையும் இழுத்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் வடிவமைப்புமே தெளிவில்லாமல் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மனநிலையில் பேசுகிறார்கள். அதனால், திரையில் நடப்பவை எதுவுமே நம் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே க்ளிக் ஆகும் மிர்ச்சி விஜய் மற்றும் அவரது நண்பர்களின் நகைச்சுவை ஒன்லைன் மட்டுமே ஆறுதல் தருகிறது.
முதற்பாதியில் குறைந்தபட்சம் கதை நகர்வாவது நிகழ்ந்து, ஒரு முக்கியமான ‘ப்ளாட்டை’ நோக்கி இடைவேளையில் அடி எடுத்து வைத்தது. ஆனால் இரண்டாம் பாதியோ தறிகெட்டு ஓடும் திரைக்கதையால் கதையின் கருவிலிருந்தே விலகிப் போகிறது. நகைச்சுவையில் ஸ்கோர் செய்ய, அதற்கு ஏதுவான காட்சிகளை உருவாக்கியிருக்கும் இயக்குநர், பிரதான கதாபாத்திரங்களை வைத்து அழுத்தமாக ஸ்கோர் செய்ய எந்தக் காட்சியையும் எழுதவில்லை. முக்கியமாக, லீனாவிற்கும் மீராவிற்குமான உணர்வுபூர்வமான உரையாடலாக நிகழ்ந்திருக்க வேண்டிய இரண்டாம் பாதி திரைக்கதை, கோவா மதுபான விடுதி, குதிரை வண்டி நகைச்சுவைகள், சாமியார் மடம், காட்டில் புலி சாகசம் எனச் சோதிக்கவே செய்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி திரைமொழியாகவும் படத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒரு காட்சி சொல்ல வருவது என்ன என்பது நமக்குப் புரிந்துவிட்ட பிறகும் கட் செய்யாமல் மீண்டும் மீண்டும் வசனங்கள் வைத்து அதை நிரப்பியிருக்கிறார்கள். எடுத்துவிட்ட புட்டேஜ் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பு எதற்கு என்று புரியவில்லை.
முதற்பாதியில் நடக்கும் கதையை, வெங்கட் பிரபு, யோகி பாபு, விடிவி கணேஷ் எனப் பார்ப்பவர்கள் எல்லாரிடமும் ‘ஃப்ளாஷ் பேக்’காக சொல்கிறார் கதாநாயகன். எல்லோரும் சொல்லி வைத்தபடி, ‘இப்படிப்பட்ட ஒரு மொக்கை கதையை நான் கேட்டதே இல்லை’ எனக் கதாநாயகனிடம் வாக்குமூலம் அளிக்கிறார்கள். இதை இயக்குநரின் சுயவிமர்சனமாக எடுத்துக்கொள்வதா இல்லை பார்வையாளர்களின் மனக்குரலாக எடுத்துக்கொள்வதா என்பதுதான் தெரியவில்லை.