தைவானைச் சேர்ந்தவர் தொழிலதிபர் லீ மெங்-சு. ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த லீ மெங்-சு, ஆண்டுக்கு இரண்டு முறையேனும் சீனாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், 2019-ம் ஆண்டும் வழக்கம் போல சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சீனாவின் ஹாங்காங்கில் போராட்டம் நடந்திருக்கிறது. அதனால், சில நாள்கள் அவர் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஹோட்டல் அறையிலிருந்து காவல்துறையைச் சேர்ந்த சிலரை புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அதன் பிறகு அவர் தனது சக ஊழியரைச் சந்திக்க ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார். அவர் தனது பணிக்காக தைவானுக்குக் கொண்டு செல்லவிருந்த 10 வீடியோ கேமராக்களை சீன விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அதில், சீனா காவல்துறை அதிகாரிகளின் புகைப்படம் இருந்ததால், அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டு அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தைவானைச் சேர்ந்த உளவாளி எனச் சந்தேகமடைந்த காவல்துறை, அரசு ரகசியங்களைத் திருடியதற்காக அவரை கைது செய்தது.
அதைத் தொடர்ந்து, அவர் ஹாங்காங்கில் தங்கியிருந்த அறையில் சுமார் 72 நாள்கள் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஒரு முகாமுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர், “தாய்நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டதற்கு வருந்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் மன்னிப்பு கேட்டதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். மொத்தமாக 1,400 நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்

இறுதியாக அவர் கடந்த திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜப்பானில் இருக்கிறார். விரைவில் தைவானுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கு முன்பு இந்த சிக்கலிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.