Doctor Vikatan: ஈரமான தரைகள் மற்றும் பாத்ரூம்களில் எல்லோரும் புழங்கினாலும் மெதுவாக நடக்கும் வயதானவர்களுக்கு அதிகம் சறுக்கி விடுவது ஏன்?
Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

ஈரம் எங்கிருந்தாலும் அந்தப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அது படிகிற இடங்களில் மென்மையான படலம் ஏற்பட்டு, கால்களை ஊன்றும்போது பிடிமானம் இல்லாமல் வழுக்கிவிடும். அதனால்தான் குளியலறை, கழிவறை போன்றவற்றை உபயோகித்து முடித்ததும் ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திருக்கப் பழக வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
நாம் பயன்படுத்திய குளியலறை, கழிவறையை அடுத்தவர் முகம் சுளிக்காமல் பயன்படுத்த ஏதுவாக முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக வயதானவர்கள் உள்ள வீடுகளில் குளியலறை மற்றும் கழிவறை சுகாதாரம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஈரமின்றி உலர்வாக இருக்க வேண்டும்.
சோப்புத் தண்ணீர், பூஞ்சைப் படலம் போன்றவை தரையில் படர்ந்து அவர்களுக்கு வழுக்கிவிடும் வாய்ப்புகள் மிக அதிகம். இன்று பெரும்பாலான வீடுகளில் குளியலறை, கழிவறைகளல் டைல்ஸ் பதிக்கிறார்கள். அதில் லேசாக தண்ணீர் இருந்தாலே யாருக்கும் வழுக்கி விடும்.
எனவே குளியலறை, கழிவறைகளில் வழுக்கிவிழாதபடியான ஆன்டிஸ்கிட் டைல்ஸ் பதிக்க வேண்டியது அவசியம். முதியவர்கள் உள்ள வீடுகளில் அவர்கள் புழங்கும் எல்லா இடங்களிலும் சொரசொரப்பான தரையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

கழிவறைகளில் உட்கார்ந்து எழுந்திருக்கும் இடத்தில் பிடிமானத்துக்கு ஒரு கம்பி பொருத்தலாம். படிகளில், நடைபாதைகளில்கூட இவற்றைப் பொருத்திக் கொடுக்கலாம்.
இள வயதில் தரை வழுக்கிவிட்டால்கூட சட்டென சுதாரித்து விழாமல் தப்பித்துவிடுவோம். வயதானவர்களுக்கு உடலியக்கம் குறைவதால், அவர்களால் அப்படி சட்டென சமாளிக்க முடியாது. லேசாக வழுக்கினாலும் விழுந்துவிடுவார்கள். அடிபடவும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.