அதிமுக மாநாடு : தென் மண்டலத்தில் கொடி நாட்டும் எடப்பாடி பழனிசாமி – ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

அதிமுக பொதுச் செயலாளராக

பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரம்மாண்ட மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது.

மாநாட்டுக்காக கடந்த சில மாதங்களாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் டார்கெட் வைத்து ஆள்களை அழைத்து வர தலைமைக் கழகத்திலிருந்து உத்தரவுகள் சென்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மாநாட்டுக்காக பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் பிரித்து வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் பலரும் கடந்த சில வாரங்களாக மதுரையை மையமிட்டு தொண்டர்களை ஒருங்கிணைத்து வந்தனர். மாநாட்டுப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். அதிமுகவின் வயதைக் குறிக்கும் விதமாக 51 அடியில் கொடிக்கம்பம் தயார் செய்யப்பட்டது.

முன்னதாக மாநாட்டுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு டன் மலர்களை ஹெலிகாப்டர் மூலம் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநாட்டில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

காலை முதல் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கங்கள், ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மூன்று வேளையும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை முதல் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பேச உள்ள நிலையில் மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி மதுரையில் பிரம்மாண்ட கூட்டத்தை அதிமுக இன்று கூட்டியுள்ளது. குடும்பம் குடும்பமாக அதிமுக தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் அதிமுக தொண்டர்கள் ஒரே இடத்தில் கூடி திருவிழா போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென் மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது, முக்குலத்தோர் சமூக வாக்குகள் டிடிவி தினகரன் பக்கம் சென்றுவிட்டன என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அதை மாற்றிக் காட்டும் வகையில் தான் மதுரையில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டது.

அதிமுக எழுச்சி மாநாடு ஜோதி – வழி அனுப்பிய முன்னாள் அமைச்சர்கள்

கூட்டணியில் உள்ள பாஜக தொடர்ந்து அதிமுகவை சீண்டி வரும் நிலையில் மாநாடு நடத்தி பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி தங்கள் பவரை காட்டும் வகையிலும் இந்த மாநாடு அமைய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்திலிருந்து உத்தரவுகள் சென்றுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் திமுக தொடர்ந்து பல தேர்தல்களில் வென்று வருவதும், அதிமுக தோல்வியைத் தழுவி வரும் நிலையில் மக்களவைத் தேர்தலில் அதை மாற்றிக் காட்ட வேண்டும், தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மாநாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மூன்று காரணங்களில் எவற்றையெல்லாம் இந்த மாநாடு பூர்த்தி செய்ய உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.