லாகூர் : பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் லாரி மீது பஸ் மோதி தீப்பிடித்ததில், பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, இஸ்லாமாபாதுக்கு 40 பயணியருடன் பஸ் ஒன்று சென்றது. இது, நேற்று அதிகாலை பைசாலாபாத் நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற எரிபொருள் டேங்கரின் பின்பகுதியில் மோதியது.
இதில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 16 பேரையும் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீஸ் ஐ.ஜி., சுல்தான் கவாஜா கூறுகையில், ”இரு வாகனங்களின் டிரைவர்களும் இறந்துவிட்டனர். பஸ் டிரைவர் துாங்கியதால் விபத்து நேர்ந்ததா என தீவிர விசாரணை நடத்தப்படுகிறது,” என்றார்.
11 தொழிலாளர்கள் பலி
பாக்.,கில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குல்மிர் பகுதியில் வாகனம் ஒன்றில் 16 தொழிலாளர்கள் கட்டுமான பணிக்காக நேற்று சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்ததில் 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மூவர் என்னவாகினர் என தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement