பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட புதுடில்லி வந்த பாகிஸ்தான் பெண்| Pakistani woman came to New Delhi to tie rakhi rope to PM Modi for Raksha Bandhan

புதுடில்லி :ரக் ஷா பந்தன் தினத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, 30 ஆண்டுகளாக ராக்கி கயிறு கட்டி வரும் பாகிஸ்தான் பெண் இந்தாண்டு ராக்கி கயிறு கட்ட, புதுடில்லிக்கு வந்துள்ளார்.

வரும் 30ல், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தில், சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த கமர் மொஹ்சின் ஷேக் என்ற பெண், திருமணத்திற்கு பின், குஜராத்தின் ஆமதாபாதில் குடியேறினார்.

இதன் பின், ரக் ஷா பந்தன் தினத்தில், பிரதமர் மோடிக்கு அவர் ராக்கி கயிறு கட்டி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராக பிரதமர் மோடி இருந்த காலத்தில் இருந்து, 30 ஆண்டுகளாக, கமர் மொஹ்சின் ஷேக் ராக்கி கயிறு கட்டி வருகிறார்.

கடந்த இரு ஆண்டு களாக, கொரோனா தொற்றால், பிரதமர் மோடியை, கமர் மொஹ்சின் ஷேக்கால் சந்திக்க முடியவில்லை. எனினும், தபால் வாயிலாக, அவருக்கு ராக்கி கயிறு அனுப்பினார்.

இந்நிலையில், இந்த ஆண்டு ரக் ஷா பந்தன் தினத்தில், பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட, தலைநகர் புதுடில்லிக்கு கமர் மொஹ்சின் ஷேக் நேற்று வந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்த முறை நானே ராக்கி கயிறை உருவாக்கியுள்ளேன். பிரதமர் மோடிக்கு விவசாயம் குறித்த புத்தகத்தை பரிசளிப்பேன். அவரது நீண்ட ஆயுளுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன். நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து அயராது பிரதமர் மோடி உழைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராக்கி கயிறு அனுப்பிய பாக்., பெண்

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கு, ஆன்லைன் விளையாட்டு வாயிலாக, உ.பி.,யில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வந்து, சச்சினை சந்தித்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், ரக் ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோருக்கு, சீமா ஹைதர் ராக்கி கயிறை அனுப்பி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.