ஜோகன்னஸ்பர்க், ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, தென் ஆப்ரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின், 15வது உச்சி மாநாடு, ஆப்ரிக்க நாடான தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில், நேற்று துவங்கியது.
நாளை மறுதினம் வரை நடக்க உள்ள இந்த மாநாட்டில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தலைநகர் புதுடில்லியில் இருந்து தனி விமானம் வாயிலாக, பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக, தென் ஆப்ரிக்காவுக்கு நேற்று புறப்பட்டார்.
இந்திய நேரப்படி, நேற்று மாலை ஜோகன்னஸ்பர்க்கில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, அந்நாட்டு துணை அதிபர் பால் மஷாடைல் வரவேற்றார்.
இதையடுத்து, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஹோட்டலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, வரும் 30ல் கொண்டாடப்பட உள்ள ரக் ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர்.
பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாட உள்ள பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ள ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவெடுக்கும். இந்தியாவில் தொழில் செய்வதை எளிமையாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களையும் எங்கள் அரசு மேற்கொண்டு வருகிறது.
விரைவிலேயே இந்திய பொருளாதாரம், 410 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாறும். உலகில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதில், 800 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்