உதயநிதி டிஎன்பிஎஸ்சி பாஸ் ஆகட்டும்.. அரசியலை விட்டே போயிடுறேன்.. ஒரே போடாக போட்ட அண்ணாமலை

நெல்லை: “அமைச்சர்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி பாஸ் ஆகினால் நான் அரசியலை விட்டே போய் விடுகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது அவர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார்.

“நீங்கள் யார் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறுவதற்கு.. உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? முதல்வர் அனுப்பும் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பும் சாதாரண போஸ்ட் மேன் தானே நீங்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஆளுநர் பதவியை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற முடியுமா? மக்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள்” என உதயநிதி பேசினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட்டை எதிர்த்து திமுக நடத்திய உண்ணாவிரதத்தில் சாதாரண பொதுமக்கள் கலந்துகொள்ளவில்லை. ப்ளஸ் 2 மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களா செல்லவில்லை. ஒரு ஆளுங்கட்சி நடத்துகிற போராட்டம் என்றால் மாநிலமே ஸ்தம்பித்திருக்க வேண்டுமே.. அப்படி எதுவும் நடக்கவில்லை. இதில் இருந்தே திமுகவுக்கு பொதுமக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள்.

நீட் போராட்டத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் உதயநிதி பேசி இருக்கிறார். ஆளுநர் பதவியை துறந்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என அவர் கேட்டிருக்கிறான். நான் உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன். உதயநிதி எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி பாஸ் ஆக முடியுமா? குரூப் 1 கூட வேண்டாம். குரூப் 4 தேர்விலாது அவர் பாஸ் ஆவாரா? அப்படி அவர் பாஸ் ஆயிட்டார்னா நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.