பெண் குளியல் ‘வீடியோ’ வீட்டு உரிமையாளர் கைது
ராம்நகர்: பெண் குளிப்பதை மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து, ‘வாட்ஸாப்’ குழுவில் பகிர்ந்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராம்நகர் கனகபுராவில் வசிப்பவர் தன்ராஜ், 28. இவருக்கு சொந்தமான வீட்டில், திருமணமான 30 வயது பெண் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் காலை அந்த பெண் குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, ஜன்னல் வழியாக, தன்ராஜ் மொபைல் போனில் அதை வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை நண்பர்கள் உள்ள, ‘வாட்ஸாப்’ குரூப்பில் பகிர்ந்து உள்ளார். இது பற்றி அந்த பெண்ணுக்கு தெரிந்தது. கனகபுரா போலீசில் புகார் அளித்தார்.
நேற்று முன்தினம் மாலை தன்ராஜை கைது செய்ய, போலீசார் சென்றனர்.
அப்போது, போலீசாருடன் தன்ராஜின் தாய் ஹுச்சம்மா, 50, உறவினர் கிருஷ்ணகுமாரி, 40, ஆகியோர் தகராறு செய்தனர்.
தன்ராஜின் மொபைல் போனை கீழே துாக்கி போட்டனர். இதையடுத்து தன்ராஜ், ஹுச்சம்மா, கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடக்கிறது. தன்ராஜ் எடுத்த வீடியோவை அழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கேரள லாட்டரி மோகத்தால் மனைவியை கொன்ற கணவர்
பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் தனியார் தோட்டத்தில் காளிமுத்து, 65, அவரது மனைவி ராஜேஸ்வரி, 60, ஆகியோர் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.
![]() |
இவர்களது மகள் கவிதாமணி திருமணமாகி கோவையில் வசிக்கிறார். ஒன்பது மாதங்களுக்கு முன், கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி, கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆயாவாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காளிமுத்து, தன் மகள் வீட்டுக்கு சென்று, மனைவியை சமரசம் செய்து, தோட்டத்துக்கு அழைத்து வந்தார்.
நேற்று காலை நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்காததால், தோட்டத்து பணியாளர்கள் சென்று பார்த்த போது, காளிமுத்து துாக்கில் தொங்கியபடி கிடந்தார். அருகில், ராஜேஸ்வரியும் இறந்து கிடந்தார்.
போலீசார் கூறியதாவது:
காளிமுத்துவுக்கு கேரள லாட்டரி சீட்டுகள் அதிகளவு வாங்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்ததால் அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரி, அவரது மகள் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
சமாதானப்படுத்தி அழைத்து வந்தபின், கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில், காளிமுத்து, தலையணையால் அழுத்தி ராஜேஸ்வரியை கொலை செய்தார். அதன்பின், அவரும் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு கூறினர்.
டாக்டரை தாக்கிய போதை நபர் கைது
திண்டுக்கல்: தலையில் அடிபட்டு குடிபோதையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி டாக்டரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாலப்பட்டியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ஜோஸ்வா 23. இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தலையில் அடிபட்ட நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
திண்டுக்கல்லை சேர்ந்த 40 வயது டாக்டர் ஒருவர் அவரை பரிசோதித்தார். இதன்பின் மருந்துகள் எழுதி கொடுத்து, ஊசி போடுவதற்காக நர்சிடம் பரிந்துரைத்தார்.
ஊசி போட கூறியதால் ஆத்திரமடைந்த ஜோஸ்வா டாக்டர் சட்டையை பிடித்து தாக்கினார். புகாரின்பேரில் வடக்கு போலீசார் ஜோஸ்வாவை கைது செய்தனர்.
தந்தை, மனைவி, மகனை கொன்று சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 70, விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவருக்கு இரு மனைவியர்.
![]() |
முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவது மனைவி வசந்தா, 60, என்பவருடன் வசித்தார். இவரது மகன் திலக், 38; சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி மகேஷ்வரி, 28. இவர்களது மகன் சாய்கிஷன், 6.
குழந்தை சாய்கிஷனுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, திலக் அவரது மனைவியின் மொபைல் போனில் இருந்து உறவினர்களுக்கு, ‘தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்’ என குறுந்தகவல் அனுப்பினார்.
![]() |
போலீசார் வந்து பார்த்த போது, வசந்தா உயிருக்கு போராடிய நிலையில், திலக், சிவராமகிருஷ்ணன், மகேஷ்வரி, சாய்கிஷன் இறந்து கிடந்தனர். வசந்தாவை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கன்னங்குறிச்சி போலீசார் கூறியதாவது:
‘ஆன்லைன் டிரேடிங்’ வியாபாரத்தில் திலக்குக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதேநேரம் மகனின் மருத்துவ செலவு அதிகரிக்க, அதிகளவில் கடன் வாங்கினார். மேலும், மாமியார் – மருமகளான வசந்தா, மகேஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
இதனால் மனமுடைந்த திலக், தன் தந்தை, மனைவி, மகன் ஆகியோரை கொலை செய்து, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு கூறினர்.
திலக்கின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போதை மாத்திரை கடத்தல் ஆந்திர வாலிபருக்கு சிறை
சென்னை: போதை மாத்திரைகள் கடத்தல் வழக்கில், ஆந்திர வாலிபருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
போதைப்பொருள் கடத்தப்படுவதாக, 2020 ஜூன் 15ல், சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் பீமாவரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த் என்பவர் பெயருக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் கல்வி விளையாட்டு பாக்ஸ்கள் இருந்தன.
அவற்றில், 127.49 கிராம் எடை கொண்ட மாத்திரைகள் இருந்தன. அவை போதை மாத்திரைகள் என தெரியவந்தது. முகவரியை வைத்து விசாரித்த அதிகாரிகள், அதை ஆர்டர் செய்தது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குரெல்லா பானுசந்தர், 27 என்பதை கண்டுபிடித்தனர்.
அவரை கைது செய்து, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. சுங்கத் துறை சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.சுரேஷ்குமார் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், குரெல்லா பானுசந்தருக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்