சின்னத்திரை நாயகன், நாயகி நடிக்கும் 'பரிவர்த்தனை'

எம்.எஸ்.வி புரொடக்ஷன் சார்பில் பொறி.செந்திவேல் கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் 'பரிவர்த்தனை'. வெத்து வேட்டு, தி பெட், அகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதன் நாயகன் நாயகியாக சின்னத்திரை நட்சத்திரங்களான ‛நம்ம வீட்டு பொண்ணு' தொடரின் நாயகன் சுர்ஜித், ‛ஈரமான ரோஜாவே 2' தொடர் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜேஸ்வரி, தேவிப்ரியா, பாரதிமோகன், திவ்யாஸ்ரீதர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் மூன்று காலகட்டங்களாக வரும் இப்படத்தில் பருவ வயதினராக மோகித், ஸ்மேகா ஆகியோரும், சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது: காதல் எப்போது வரும் எவர்மீது வரும் என்பது இப்போதுவரை எவருக்குமே தெரியவில்லை அந்த மாயவலையில் சிக்கிக் கொண்டவர்களின் மனப்பிரவாகம்தான் படம். நம் வாழ்வின் ஆகச்சிறந்த தருணங்கள் எதுவென்றால் அது காதல் காலங்கள்தான். அந்த அழகிய தருணங்களை அதன் இயல்புகளோடு படமாக்கியிருக்கிறோம் .

அதோடு சில வருடங்களாக சாதிய வன்மங்களையும், போதை பழக்க வழக்கங்களை மட்டுமே பேசி கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் காதலையும் காதல் சார்ந்து ஏற்படக் கூடிய மன உணர்வுகளையும் மட்டுமே இப்படத்தில் பேசியிருக்கிறோம். இதன் படப்பிடிப்பு முழுவதும் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் தென்பகுதியான புளியஞ்சோலையில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.