மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம்

ஈரோடு

ஈரோட்டில் நடந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடத்தை பிடித்தது.

கூடைப்பந்து போட்டி

ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஈரோடு திண்டல்மேட்டில் உள்ள இஷான் ஹைலேண்ட் அரினா மைதானத்தில் நடந்தது. தொடக்க நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில், வடுகபட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், ஈரோடு சி.எஸ். அகாடமி பள்ளிக்கூட அணி 2 -ம் இடத்தையும், ஈரோடு டிப்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் பிடித்தது.

பரிசளிப்பு விழா

இதேபோல் 14 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் ஈரோடு சி.எஸ். அகாடமி அணி முதல் இடத்தையும், ஈரோடு கார்மல் மெட்ரிக் பள்ளிக்கூட அணி 2-ம் இடத்தையும், கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் தட்டிச்சென்றனர். மேலும் 19 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் வடுகப்பட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், டிப்ஸ் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூட அணி 2-ம் இடத்தையும், டிப்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் பிடித்தனர். 19 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் ஈரோடு பி.வி.பி. பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், வடுகப்பட்டி ராஜேந்திரா பள்ளிக்கூட அணி 2 -ம் இடத்தையும், ஈரோடு டிப்ஸ் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிக்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தர்மராஜ், ராஜேந்திரா பள்ளிக்கூட தாளாளர் செந்தில் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசுகளையும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். விழாவில் ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் எஸ்.கோபிநாத், பொருளாளர் பி.எஸ்.வருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.