புதுடில்லி, நீதிமன்றங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக, வசதிகளை மேம்படுத்தும் ‘இ – கோர்ட்’ எனப்படும் மின்னணு நீதிமன்ற திட்டத்தின் மூன்றாம் கட்டத்துக்கு, 7,210 கோடி ரூபாய் செலவிட, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில், மின்னணு சேவைகள் வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில், இ – கோர்ட் திட்டம், 2007ல் துவக்கப்பட்டது. இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், சமீபத்தில் முடிந்தன.
இதையடுத்து, மூன்றாம் கட்டத்தில், 7,210 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:
அடுத்த நான்கு ஆண்டுக்கானது இந்த மூன்றாம் கட்ட திட்டம். நீதித் துறை முழுதும் டிஜிட்டல் மயமாக்கப்படுவது, ஆன்லைன் வாயிலாக, காகிதமில்லா நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான பணிகள் இந்தக் கட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
வழக்குகள் தொடர்வதில் இருந்து, விசாரணை, இறுதி உத்தரவுகள் வரை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாகிறது. மேலும், அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாகும்.
வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்வதில் இருந்து, விசாரணைக்கு பட்டியலிடுதல் உட்பட அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக உள்ளன.
நீதிபதிகள், பதிவாளர்கள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடருவோர் என அனைவரும் மின்னணு வாயிலாக இணைக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நம் நாட்டைச் சேர்ந்த, ‘சுவென் பார்மசுடிகல்ஸ்’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், மேற்காசிய நாடான சைப்ரஸை சேர்ந்த ‘பெர்ஹியான்டா’ நிறுவனம், 9,589 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்வதற்கு அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஐந்து ஆண்டுகளில், மருந்து தயாரிப்பு துறையில் மட்டும், 43,713 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு பாராட்டு
ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு புதுடில்லியில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி, அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்