Doctor Vikatan: என் அப்பாவுக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு இரவில் சரியான தூக்கம் இல்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார். அதேபோல எப்போதும் பசியில்லை என்றே சொல்கிறார். சரியாகச் சாப்பிட மறுக்கிறார். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் என்ன காரணம்? முதுமையில் இப்படித்தான் இருக்கும் என்கிறார்களே, அப்படித்தானா? முதியவர்களுக்கு அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர்நல மருத்துவர் ஜோசப்.

கவலைகள் காரணமாக முதியோரின் தூக்க சுழற்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மையால் தவிக்கும் முதியோர், பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையோடு மைல்டான தூக்க மருந்து கொடுக்கலாம். அதன் மூலம் அவர்களது தூக்கமும் முறைப்படும், மலச்சிக்கல் பிரச்னையும் சரியாகும்.
பசியின்மை என்று சொல்வது உணவின் மீதான ஆர்வமின்மையால் மட்டுமே. இளவயதில் பிடித்ததைத் தேடித்தேடிச் சாப்பிடுவார்கள். வயதான பிறகு இருப்பதைச் சாப்பிடப் பழகிவிடுவார்கள். பசிக்கிறதோ இல்லையோ, அந்த வேளைக்கு எதையோ சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்துக்காகச் சாப்பிடுவார்கள். அது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்தும்.
முதிய வயதில் குடல் அசைவு குறையத் தொடங்கும். அதனால்தான் முதியோருக்கு மலச்சிக்கல் என்பது பெரும் பிரச்னையாக இருக்கும். பசியில்லை என சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பல வருடங்களாக வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து உட்கார்ந்து, பேசிக்கொண்டே சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு, திடீரென அந்தத் துணையின் இழப்பு காரணமாக தனியே சாப்பிட வேண்டிய நிலையிலும் உணவின் மீது வெறுப்பு உண்டாகலாம்.
ஆக்டிவ்வாக இருக்கும் முதியோர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளுக்கேற்ப தேவைப்படுகிற சோதனைகளைச் செய்தால் போதும். குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதயநலம் போன்றவற்றுக்கான ரெகுலர் டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்க்கலாம்.

அதுவே படுத்த படுக்கையாக இருப்போருக்கு சோடியம், பொட்டாசியம் குறையலாம். நீரிழிவு இருந்தால் ரத்தச் சர்க்கரை குறையலாம். படுக்கையில் இருப்போருக்கு உணவு கொடுக்கும்போது அது உணவுக்குழாய்க்குள் போகாமல் சுவாசக்குழாய்க்குள் போகும் அபாயம் இருப்பதால் மிகுந்த கவனம் தேவை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.