கனடா குடியுரிமைப் பெற்ற சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இதற்கிடையில், இரு நாட்டு தூதர்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டது. கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மோடியிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியது, இரு நாடுகளும் பரஸ்பரம் விசா வழங்குவதை நிறுத்தியிருப்பது என பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், கனடாவின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் ப்ளய்ர் (Bill Blair), வெஸ்ட் பிளாக் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “இந்தியாவுடனான கனடாவின் உறவு முக்கியமானது. கனடா, இந்தியாவுடனான கூட்டாண்மையைத் தொடரும். அதே நேரம் இந்தியாமீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையும் தொடரும். கனடாவின் இந்த நடவடிக்கையால், இந்தியாவுடனான கனடாவின் உறவு சவாலான பிரச்னையாகவே இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், சட்டத்தைப் பாதுகாப்பதற்கும், எங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதும், ஒரு முழுமையான விசாரணையை நடத்தி, உண்மையைக் கண்டறிவதற்கான பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.
இந்தியாமீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்தியா – கனடாவுக்குமான நமது இறையாண்மை மீறப்பட்டிருப்பது உறுதியாகும். அது கனடாவுக்கு மிகுந்த கவலையளிக்கும் செய்தியாகவே இருக்கும். கன்டாவில் ராணுவப் பாதுகாப்பை அதிகரிக்கவும், மேலும் ரோந்து பணிக்கான செயல்முறை நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 492.9 மில்லியன் டாலர் ராணுவத்துக்குச் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ராணுவத்துக்கு 2.3 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.