நான்கு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரம் நீடித்துவரும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தீவைப்பு, துப்பாக்கிச்சூடு, இரு தரப்பினரிடையே மோதல்கள், உயிரிழப்புகள் என்று மணிப்பூர் மாநிலம் வன்முறைக்காடாகவே நீடித்துவரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக 2,000 பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீரிருந்து மணிப்பூருக்கு சமீபத்தில் வரவழைக்கப்பட்டனர். மேலும் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மணிப்பூரில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை லேசாக எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற யதார்த்தத்தை தற்போது அங்கு நிலவும் சூழல் உணர்த்துகிறது.
தொடர் வன்முறை காரணமாக மணிப்பூரில் இணையதள சேவை முடக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 23-ம் தேதி மீண்டும் இணையசேவை தொடங்கியபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. குக்கி பழங்குடியினப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியான காலகட்டத்தில், மைதேயி இனத்தைச் சேர்ந்த 20 வயது மாணவனும், அவரின் 17 வது தோழியும் காணாமல் போனார்கள்.

அவர்கள் இருவரும் ஆயுதமேந்திய ஒரு குழுவிடம் சிக்கியிருப்பது போன்ற புகைப்படமும், வனப்பகுதியில் அவர்கள் இருவரும் இறந்துகிடக்கும் புகைப்படமும் செப்டம்பர் 23-ம் தேதி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. காணாமல்போன மாணவியும், மாணவனும் இறந்துகிடக்கும் புகைப்படம்தான் வெளியாகியிருக்கிறது. அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது குறித்து மணிப்பூர் மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், `கடந்த ஜூலை மாதம் காணாமல்போன இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்திருப்பது மாநில அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இந்த வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று மணிப்பூர் மாநில அரசு கூறியிருக்கிறது.
ஆனால், தற்போது மணிப்பூரில் நடைபெற்றுவரும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அங்கு விரைவில் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை எழவில்லை. மாணவர், மாணவியின் கொலையைக் கண்டித்து தலைநகர் இம்பாலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இம்பாலின் மெய்ரோங்கோம் பகுதியில் முதல்வர் பிரேன் சிங் அலுவலகம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.

அவர்களை பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, பாதுகாப்புப்படையினர்மீது கற்கள் வீசப்பட்டன. அதனால், மாணவர்கள்மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்புகை குண்டுகளையும் பாதுகாப்புப்படையினர் வீசினர். அதில் பலர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் 40,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், இன்னும் கூடுதலாக பாதுகாப்புப்படை வீரர்கள் அங்கு அழைத்துவரப்படுகிறார்கள். ஆனால், இரண்டு இனத்தவருக்கு இடையே பகை மூண்டு மோதல்கள் உருவான நிலையில், உரிய நேரத்தில் ஆட்சியாளர்கள் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு தூரத்துக்கு நிலைமை சீரியஸாகி இருக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். அது உண்மைதான் என்று நிரூபிப்பதுபோலத்தான் மணிப்பூரின் இன்றைய நிலை இருக்கிறது.

அங்கு நிலைமை கைமீறிப்போய்விட்டது. எத்தனை ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டாலும், அதனால் அமைதி திரும்பிவிடும் என்று சொல்லிவிட முடியாது. மணிப்பூரில் பழங்குடியினர் அதிகமாக வாழும் மலை மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், மைதேயி இன மக்கள் வசிக்கும் சமவெளிப்பகுதியில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே காவல் நிலையங்களிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் தீவிரவாதக் குழுக்கள் முழுமையாக திருப்பி ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில், சமவெளிப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில்தான், ‘பதற்றம் நிறைந்த மாநிலம்’ என்று மணிப்பூர் அரசே அறிவித்திருக்கிறது.

மணிப்பூர் பிரச்னையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகிறார்கள். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அந்த முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும். இல்லையென்றால், ‘பதற்றம் நிறைந்த மாநிலம்’ என்ற அறிவிப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் அறிவிக்கும் நிலைதான் இருக்கும்
என்றுதான் தெரிகிறது.