ரத்தான நிகழ்ச்சிக்கு வாங்கிய 25 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான்: உதவியாளர் விளக்கம்

இசை நிகழ்ச்சி குழப்பத்தால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும் முன்பே இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் கே.விநாயக் செந்தில், பொருளாளர் கே.விவேகானந்தா சுப்பிரமணிய நாதன் ஆகியோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் “சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட்டோம். இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவரை அணுகினோம். இந்த இசை நிகழ்ச்சிக்காக 29.5 லட்சம் முன்தொகையாக கொடுத்தோம். ஆனால் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி கிடைக்கவில்லை. எனவே முன்தொகையை திரும்ப தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரகுமான் அதற்கு ஒத்துக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட ஒரு காசோலையை எங்களுக்கு கொடுத்தார்.

ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென அந்த காசோலை திரும்ப வந்துவிட்டது. நாங்கள் கொடுத்த பணத்தை தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டை ஏ.ஆர்.ரகுமானின் செயலாளரும் 'தி குரூப்' என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில் வேலவன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஏசிகான் 2018 சென்னை' என்ற மூன்று நாள் நிகழ்வுக்காக ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி அனுமதி பெற்றோம். இதன்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். அப்போது ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்காக அவரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் காசோலை, வேறு நிகழ்ச்சிக்காக 25 லட்சம் ரூபாய் காசோலை என இரண்டு காசோலைகளை அந்த அமைப்பினர் வழங்கினார்கள்.

அந்த சமயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீங்களாகவே (சம்மந்தப்பட்ட அமைப்பு) நிகழ்ச்சிகளை நிறுத்தினால் அல்லது ரத்து செய்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் முன் பணம் திரும்பி தரப்படாது என குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில் நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தால் முன்பணம் திரும்பி வழங்க தேவையில்லை என்ற நிபந்தனை உட்பட அனைத்து விஷயங்களும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டு கையெழுத்தானது.

நிகழ்வில் அதிக தொகை செலவிட இருந்ததால் இசை நிகழ்ச்சியை அந்த அமைப்பால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இருந்த போதிலும் அந்த அமைப்பினரே இசை நிகழ்ச்சி ரத்து செய்த நிலையிலும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட்ட காசோலை திருப்பி வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஏ.ஆர். ரகுமானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த நிலையில் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானின் பெயரை இந்த புகாரில் இணைத்துள்ளனர். அவருக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

அந்த அமைப்பினர் காசோலை கொடுத்ததாக குறிப்பிடுவது வேறு நிகழ்ச்சிக்கானது. ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட முன் தொகை திருப்பி வழங்க தேவையில்லை. எங்கள் நிறுவனத்தின் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகாரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மேலும் அந்த அசோசியேஷன் மீது நாங்கள் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.